அதிக லாபத்தை அள்ளித்தரும் சன்னரக நெல்.. ஆர்வத்துடன் பயிரிடும் டெல்டா விவசாயிகள்..!
குறுகிய காலத்தில் அதிக மகசூல் மற்றும் லாபத்தை அள்ளித்தரும் சன்ன ரக நெற்பயிரை டெல்டா விவசாயிகள் அதிகளவு பயிரிட்டு வருகின்றனர். மோட்டா ரகத்தை விட சன்ன ரக அரிசியே விற்பனயிலும் உச்சத்தில் உள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தமிழ்நாட்டில் காலங்காலமாக பாரம்பரிய நெல் ரகங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட நெல் வகைகளை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். பொதுவாக நெல் ரகங்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அளவில் பெரியவை "மோட்டா ரகம்" என்றும் அளவில் சிறியவை "சன்ன ரகம்" என்றும் அழைக்கப்படுகிறது.
சாப்பாட்டு அரிசி, சன்ன ரகமாக இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் விருப்பம். காரணம் அதுதான் மிக உயர்வான ரகமாகும். சாப்பிடுவதற்கும் எளிதாக இருக்கும். இதனால் தான் புதிதாக உருவாக்கப்படும் பெரும்பாலான வீரிய ரகங்களும், சன்ன ரகங்களாகவே உருவாக்கப்படுகின்றன.
சன்ன ரக நெல் வகைகளின் அறுவடை காலம் 100 முதல் 120 நாட்கள் மட்டுமே. ஆனால் மோட்டா ரக நெல் வகைகளின் அறுவடை காலம் 5 முதல் ஆறு மாதங்கள் ஆகும். குறுகிய கால அறுவடை என்பதாலும், அதிக அளவில் விளைச்சல் தருவதாலும் டெல்டா விவசாயிகள் பெரும்பாலும் சன்ன ரக நெற்பயிர்களையே பயிரிடுகின்றனர்.
தமிழகத்தில் பி பி டி, ரகம் 48, பொன்னி , ஆந்திரா பொன்னி,சீரக சம்பா, விஜி டி -1 ,அனந்தூர் சன்னம் , முத்தின சன்னம் மற்றும் பாரம்பரிய சன்ன ரக நெல் வகைகள் பயிரிடப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் 80 சதவீதம் சன்ன ரக நெற்பயிர்கள் மட்டுமே பயிரிடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் இவை அதிகமாக சம்பா, தாளடி,குருவை உள்ளிட்ட பருவங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
Comments