ப்ரேக் பேடு மாற்றியதாக மோசடி.! நடுவழியில் பிரேக் பெயிலியரான மாருதி சுசுகி சியாஸ் கார்..! காசு வாங்கி மோசம் பண்ணலாமா ?

0 3370

திருவாரூர் மாருதி கார் சர்வீஸ் மையத்தில் மாற்றாத பிரேக் ஷூவை புதிதாக மாற்றியதாக கூறி வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலித்த நிலையில் நடுவழியில் கார் பிரேக் பெயிலியரானதால் சர்வீஸ் மையத்தில் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திருவாரூர், நரசிங்கம்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் தனக்கு சொந்தமான மாருதி சுசுகி சியாஸ் காரை கடந்த மாதம் 2ஆம் தேதி திருவாரூர் நாகப்பட்டினம் பைபாஸ் சாலையில் உள்ள பிள்ளை அன் சன்ஸ் மாருதி சுசுகி சர்வீஸ் மையத்தில் தனது காரை சர்வீஸிற்கு கொடுத்துள்ளார்.

சர்வீஸில் பிரேக் ஷு பேடு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மாற்றப்பட்டதாக கூறி 11,323 ரூபாய் பணத்தை கட்டணமாக அந்த சர்வீஸ் மையத்தினர் பெற்றுள்ளனர். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் தனது காரில் குடும்பத்தினர் உடன் சென்னைக்கு சென்ற பொழுது மயிலாடுதுறையில் வாகனம் பழுதடைந்து நின்றுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள மாருதி சுசுகி சர்வீஸ் சென்டரில் காரை பழுதுபார்த்து எடுத்துச்சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கார் பிரேக் பெயிலியராகி மீண்டும் பழுதடைந்ததால் திருவாரூரில் உள்ள மாருதி சுசுகி சர்வீஸ் சென்டருக்கு கோபாலகிருஷ்ணனின் மகன் பாலமுருகன் காரை எடுத்துச்சென்றுள்ளார்.

புதிதாக மாற்றப்பட்ட கார் சக்கரங்களின் பிரேக் ஷூ 2000 கிலோ மீட்டருக்குள்ளாகவே எப்படி பழுதானது ? என்ற குழப்பத்தில் , காரின் முன்பக்க சக்கரத்தை பிரித்துப் பார்க்கும் பொழுது பிரேக் ஷூ மாற்றப்படவில்லை என்பது தெரியவந்தது. புதிது மாற்றப்பட்டதாக பில்லில் சேர்த்து ஏற்கனவே பணம் வாங்கிக் கொண்ட நிலையில் மாற்றாதது ஏன் ? என்று கேட்டு பாலமுருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

காரில் ஊருக்கு செல்லும் போது பிரேக் பிடிக்காமல் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் யார் பொறுப்பு? என்று கேட்டு பாலமுருகன் மற்றும் அவருடைய நண்பர்கள் மாருதி சுசுகி சர்வீஸ் மைய ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தற்பொழுது புதிய பிரேக் ஷூவை மாற்றி கொடுத்து விடுகிறேன் எனக் கூறி சர்வீஸ் மைய மேலாளர் சமாளித்ததாக பாலமுருகன் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த மாருதி சுசுகி சர்வீஸ் மைய மேலாளர் ராஜ்மோகன் நாங்கள் புதிய பிரேக் ஷூ மாற்றி கொடுத்து விட்டோம், இடையில் அவர்கள் வெளியில் எங்கு சர்வீஸ் செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை ஆகையால் அங்கு இந்த பிரேக் ஷூ மாற்றப்பட்டதா ? என்று தெரியவில்லை இருந்தாலும் மாற்றிக்கொடுப்பதாக கூறினார்.

சர்வீஸ் மைய ஊழியர்கள் தங்களுக்கு கூடுதல் பணம் வர வேண்டும் என்ற பேராசையில் செய்கின்ற சிறு தவறுகள் கூட காரில் பழுதை உண்டாக்கி விபத்தில் பேரிழப்பை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்ந்தாவது மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments