புதிய மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரெயில்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர்
குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரயிலுக்குள் சென்று ஆய்வு நடத்திய பிரதமர், அகமதாபாத் வரை வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தும் மகிழ்ந்தார்.
அடுத்த 3 ஆண்டுகளில் புதிய தலைமுறைக்கான 400 அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நாட்டின் 3ஆவது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரெயில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் இந்த புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
வந்தேபாரத் ரெயிலை தொடங்கி வைப்பதற்காக காந்திநகர் ரெயில் நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, ரெயிலின் என்ஜின் பகுதிக்கு சென்று அது செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் புதிய வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர், சக பயணிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுடன் அகமதாபாத் வரை வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தார்.
மொத்தம் 16 பெட்டிகளில் 1128 பயணிகள் இந்த வந்தே பாரத் ரெயிலில் பயணிக்க முடியும். மும்பை-காந்தி நகர் இடையே சூரத், வடோதரா , அகமதா பாத் ஆகிய மூன்று நிறுத்தங்களில் மட்டும் இந்த ரயில் நிற்கும். சுமார் 6 மணி 20 நிமிடங்களில் இந்த ரெயில் 520 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த அதி நவீன வந்தே பாரத் ரெயிலில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஸ்டீலுக்கு பதிலாக எடை குறைந்த அலுமினியம் தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரெயிலின் எடை 50 டன்கள் வரை குறைவதுடன், குறைந்த ஆற்றலில் அதிவேகமாக செல்லும் என்றும் ரயில்வே தரப்பில் சொல்லப்படுகிறது.
Comments