சென்னையில் கனமழை.. 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!
வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 5 மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது....
வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மீது மழை தரக்கூடிய அடர்ந்த மேகமூட்டங்கள் உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்த 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நிர்வாக ரீதியாக தயார் நிலையில் இருக்க வேண்டியதை உணர்த்தும் மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஏற்கனவே ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
மேலும் வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
Comments