பிஎப்ஐ அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை - மத்திய உள்துறை அமைச்சகம்

0 4340

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் , தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 22ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, மாநில போலீசார் ஆகியோர் கூட்டாக சோதனை நடத்தினர்.

மேலும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 2வது நாளாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் 100க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த 2 சோதனை நடவடிக்கையின்போது, மொத்தம் 247 பேர் கைது செய்யப்பட்டதாக மத்திய அரசு தரப்பு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

 இந்நிலையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளான ரெகாப் இந்தியா பவுண்டேசன், கேம்பஸ் பிராண்ட் ஆப் இந்தியா, ஆல் இந்தியா இமாம் கவுன்சில், நேசனல் கான்படரேசன் ஆர் ஹூமன் ரைட்ஸ் அமைப்பு, நேசனல் உமன் பிராண்ட், ஜூனியர் பிராண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேசன் மற்றும் ரேகாப் பவுண்டேசன் கேரளாவுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து செவ்வாய்க்கிழமை இரவு அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய அரசு, இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 ஊபா எனப்படும் 1967ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ், அந்த அமைப்புகள் அனைத்தையும் சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்துள்ள மத்திய அரசு, தீவிரவாத செயல்களுக்காகவும், சிமி, ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் வைத்திருந்த தொடர்பையும் சுட்டிக்காட்டி, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து அளிக்கப்பட்ட நிதி மற்றும் சித்தாந்த தொடர்பு மூலம், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும் கிளை அமைப்புகள் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்ததாகவும், மக்கள் மனதில் பயங்கரவாதம் தொடர்பான அச்சத்தை விதைக்க பல்வேறு குற்றச் செயல்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஈடுபட்டதாகவும், படுகொலைகளை செய்ததாகவும், நாட்டில் சமூக நல்லிணக்கம், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 

சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை தீவிரவாத பாதையில் தள்ள வேண்டும் என்ற ரகசியத் திட்டத்துடன் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா செயல்பட்டதாகவும், நாட்டின் அரசியலமைப்பை அந்த அமைப்பு அவமதித்தாகவும், கர்நாடகா, குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களும், அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தடையை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, உத்தர பிரதேச துணை முதலமைச்சர்கள் பிரஜேஸ் பதாக், கேபி மவுரியா, மகாராஸ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

தடை நடவடிக்கையை அடுத்து, டெல்லியில் சாகீன்பாக் பகுதியிலுள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகம் அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தங்கள் மீதான தடை நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments