மக்களை மிரட்டும் உண்ணிக் காய்ச்சல் உயிருக்கு ஆபத்து..! அரசு மருத்துவமனை டீன் அதிர்ச்சி தகவல்
செல்லப்பிராணி வளர்ப்போருக்கு ஸ்க்ரப் டைபஸ் என்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வினோத உண்ணிக்காய்ச்சல் பரவி வருவதாக எச்சரித்துள்ள திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு, செல்லப்பிரணிகள் வளர்ப்போர் அதிகமாக பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
திருச்சி அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை டீன் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். ஸ்க்ரப் டைபஸ் என்ற இந்த காய்ச்சல் ஓரியண்டா சுட்டுகாமொஷி என்ற பாக்டீரியாவால் ஏற்படுவதாகவும் , காய்ச்சல். தலைவலி, உடல் சோர்வு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்கிரப் டைபஸ் எனப்படும் இந்த உண்ணிக் காய்ச்சலுக்கு செல்லப்பிராணி வளர்ப்போர் எளிதாக ஆளாவதாக சுட்டிக்காட்டினார். இந்த நோயின் அறிகுறிகள் கண்ட நோயாளிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி உட்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இந்நோயின் அறிகுறிகளைக் கொண்ட 73 பேருக்கு எலிசா சோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு நோய் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை மேற்கொள்ளாமல் நோயின் தாக்கம் அதிகமானால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அவர் எச்சரித்தார்.
Comments