மாணவி ஸ்ரீமதியின் செல்போனை கொடுக்க தாய் செல்வி மறுப்பது ஏன் ? மரபணு சோதனைக்கும் மறுப்பதாக புகார்

0 4990

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என்று சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன் செவ்வாய்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றக்கோரி கோரிக்கை விடுத்த நிலையில் வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதால் இந்த மனுவை ஏன் முடித்து வைக்க கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர், உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை கண்காணித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை வழக்கு தொடர்பான ஆவணங்களை மாணவியின் பெற்றோர் தரப்புக்கு வழங்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதை சுட்டிக்காட்டினர்.

மேலும் வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுப்பதாகவும் விடுதியில் மாணவி பயன்படுத்திய மொபைல் ஃபோனை வழங்க அவர்கள் மறுப்பதாகவும் மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்க பெற்றோர்கள் மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதை புலன் விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீசாரிடம் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments