என் தாயோட ரத்தத்தை 3 ஆம் வகுப்பு படிக்கிறப்ப சாலையில் பார்த்திருகிறேன்..! உருக்கமான காவல் உதவி ஆணையர்

0 3834

படியில் பயணம் நொடியில் மரணம் என்பதை உணர்த்துவதற்காக 3ஆம் வகுப்பு படிக்கும் போது விபத்தில் தனது தாயை இழந்த சோகத்தை படிக்கட்டில் பயணித்த மாணவர்களிடம் விவரித்துள்ளார் சென்னை உதவி ஆணையர் ஒருவர். படிக்கட்டு பையன்களை பொறிவைத்து பிடித்த போலீஸ் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை தண்டையார் பேட்டையில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் அரசு பள்ளி மாணவர் ஒருவர், கெத்து காட்டுவதாக நினைத்து அரசு பேருந்தை பிடித்துக் கொண்டு ஸ்கேட்டிங் செய்து போலீசில் சிக்கியதால் சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

படிக்கின்ற வயதில் பேருந்தின் படியில் நின்றும் தொங்கியும் வாழ்க்கையை போக்கிக் கொள்ள வேண்டாம் என்பதை அறிவுறுத்தும் விதமாக சென்னை ராமாபுரம் பகுதியில் போக்குவரத்து உதவி ஆணையர் திருவேங்கடம் மற்றும் காவல் ஆய்வாளர் சாம் சுந்தர் ஆகியோர் திடீர் பேருந்து சோதனை மேற்கொண்டனர்.

பேருந்தின் படிக்கட்டுகளில் பயணித்த மாணவர்களை பிடித்த போலீசார், அவர்கள் ஓடி விடக்கூடாது என்பதற்காக முதலில் அடையாள அட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டனர்

பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணித்த மாணவர்களை அழைத்து கண்டித்த போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருவேங்கடம் தான் 3 ஆம் வகுப்பு படிக்கின்ற போது தனது தாயின் ரத்தத்தை சாலையில் பார்த்ததாக உணர்ச்சிவசப்பட்டார்,

விபத்தில் சிக்கி தனது தாய் உயிரிழந்த சம்பவத்தை அந்த மாணவர்களிடம் எடுத்துக்கூறி, உங்கள் தாய் தந்தையரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை இருந்தால் படியில் பயணம் செய்யாதீர்கள் என்று திருவேங்கடம் வேண்டுகோள் வைத்தார்.

முன் கூட்டியே புறப்பட்டு பள்ளிக் கல்லூரிகளுக்கு செல்லுங்கள் என்று அறிவுறுத்தியதோடு அதனை தொடர்ந்து மாணவர்களிடம் அடையாள அட்டைகளை திருப்பிக் கொடுத்து பத்திரமாக பயணிக்கும்படி அனுப்பி வைத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments