ஜப்பானில் பிரதமர் மோடி.. ஷின்சோ அபே நினைவேந்தலில் பங்கேற்று அஞ்சலி..!
மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக, இருதரப்பு உறவை வலுப்படுத்த ஜப்பான் பிரதமர் கிஷிடாவுடன், பிரதமர் மோடி நடத்தினார்.
கடந்த ஜூலை 8ஆம் தேதியன்று ஜப்பானின் நாரா பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அந்நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்ஷோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே.
இந்நிலையில், ஷின்சோ அபேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஜப்பான் அரசு சார்பில் டோக்கியோவில் இன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, மலர்களை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் உள்ளிட்டோரும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
19 பீரங்கி குண்டுகள் முழங்க ஷின்சோ அபேவுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. கருப்பு உடை அணிந்து வந்து ஜப்பான் அரச குடும்பத்தினர் மறைந்த ஷின்சோ அபேவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், ஷின்சோ அபேவின் மனைவியை சந்தித்து இரங்கல் தெரிவித்த பிரதமர், அபேவுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், தான் டோக்கியோவில் இருந்தபோது, அபேவின் இறுதி மரியாதை நிகழ்வில் பங்கேற்க மீண்டும் அங்கு வருவேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்றும், சிறந்த தலைவரான அபே, இந்தியா -ஜப்பான் நட்புறவில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்றும் பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்தார்.
முன்னதாக, டோக்கியோ சென்றடைந்த பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா வரவேற்றார். ஷின்சோ அபேவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.
பின்னர், இருநாட்டு தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாகவும், பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments