ஷின்சோ அபேவுக்கு நினைவேந்தல்.. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்..!

0 2723
ஷின்சோ அபேவுக்கு நினைவேந்தல்.. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்..!

மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு இன்று ஜப்பான் அரசு சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

ஜப்பானில் நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்தவரும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பருமான ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜுலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாரம்பரிய மரியாதைகளுடன் ஷின்சோ அபேவின் இறுதி சடங்கு ஜுலை 12 ஆம் தேதி நடத்தப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

 

மறைந்த ஷின்சோ அபேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஜப்பான் அரசு சார்பில் டோக்கியோவில் இன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொள்ள ஜப்பான் அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஷின்சோ அபேயின் சாம்பல் நினைவு நிகழ்ச்சியில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 19 பீரங்கி குண்டுகள் முழங்க ஷின்சோ அபேவுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. கருப்பு உடை அணிந்து வந்து ஜப்பான் அரச குடும்பத்தினர் மறைந்த ஷின்சோ அபேவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

பிரதமர் மோடியை போலவே, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் உள்ளிட்டோரும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முன்னதாக, டோக்கியோ சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா வரவேற்றார். பின்னர் இருவரும் கலந்துரையாடினர்.

அப்போது தாம் கடந்த முறை ஜப்பான் வந்தபோது, மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுடன் நீண்ட நேரம் கலந்துறையாடியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஷின்சோ அபேவை இழந்துவிட்டோம் என்றும் அவரையும் ஜப்பானையும் இந்தியா நினைவு கூர்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஷின்சோ அபேவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு நல்லுறவு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் விவாதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments