ராஜஸ்தானில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் கடும் குழப்பம்..!

0 3469
ராஜஸ்தானில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் கடும் குழப்பம்..!

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு பதிலாக புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 92 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருப்பதால் குழப்பம் அதிகரித்துள்ளது.

நபருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அசோக் கெலோட் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்ய, ஜெய்ப்பூரில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. துணை முதலமைச்சர் சச்சின் பைலட், முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த நிலையில், அவருக்கு ஆளும்கட்சி எம்.எல்ஏ.க்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால் அவர்களில் எவருக்கும் முதலமைச்சர் பதவி வழங்கக் கூடாது என கெலோட் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிந்த பின்னரே, ராஜஸ்தான் முதலமைச்சரைத் தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறி மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மேலிடப் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்ததால், நேற்று ஒரே நாளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இரண்டுமுறை ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, ஒவ்வொரு எம்எல்ஏ.வின் கருத்தையும் கேட்டு பதிலைப் பெறும் படி, மேலிடப் பார்வையாளர்களுக்கு கட்சித் தலைவர் சோனியா உத்தரவிட்டுள்ளார்.

சச்சின் பைலட்டை முதலமைச்சராக்கினால், ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக கெலோட் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். சபாநாயகர் சிபி ஜோஷியை அவரது வீட்டில் சந்தித்து எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்களை அளித்ததால் நள்ளிரவில் பரபரப்பு நிலவியது.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில், காங்கிரசின் பலம் 108 ஆக உள்ளது. இதில் 92 பேர் ஒரே நேரத்தில் பதவி விலக முடிவெடுத்திருப்பதால் அம்மாநில ஆளும்கட்சியில் குழப்பம் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments