''சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகள் வேண்டாம்'' - பிரதமர் மோடி வேண்டுகோள்
பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் 'மனதின் குரல்' என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 93ஆவது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது கடலோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் கவலையளிப்பதாகவும், இது போன்ற பிரச்சனைகளை கையாள்வது நாட்டிற்கு பெரும் சவாலாக உள்ளதாக கூறினார்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, அதற்கு மாற்றாக, சணல், பருத்தி, வாழை நார்களை கொண்டு தயாரிக்கப்படும் பைகளை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
2023ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடப்படும் நிலையில், சிறுதானியங்களைக் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், அதனை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் குறித்து இணையதளம் வாயிலாக மக்கள் பகிர வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய உயிரியியல் பூங்காவுக்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளுக்கு பெயர்களை பரிந்துரைக்கும்படியும் நாட்டு மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
Comments