பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.!
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ரசிகர்களைக் கட்டிப் போட்டு, இதயங்களைக் குதூகலிக்கச் செய்யும் குரலிசை நாயகனின் 60 ஆண்டுகால இசைப்பயணத்தை நினைவுகூர்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
இளமையான குரலைத் தேடிக் கொண்டிருந்த எம்ஜிஆரிடம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் எஸ்.பி.பியை அறிமுகப்படுத்த, கேட்டவுடனே பிடித்துப் போனது, அவரது மெல்லிய மழைச்சாரல் போன்ற மயக்கும் குரல்.
எம்ஜிஆரைத் தொடர்ந்து, சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அக்காலத்து நாயகர்கள் தங்கள் படங்களில் ஒருபாடலாவது எஸ்.பி.பி பாட வேண்டும் என்று விரும்பினர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் எஸ்.பி.பியின் குரல் இலகுவாக பொருந்திப் போனது. இருவருக்குமான வேறுபாட்டையும் எஸ்.பி.பி தமது குரலால் அடையாளப்படுத்தியது அவருடைய திறமைக்கு சான்று....
விஜயகாந்த், சத்யராஜ், மோகன், பிரபு, கார்த்திக் ஆகியோர் நடித்த படப் பாடல்களில் எஸ்.பி.பி கொடுத்த அழுத்தமும் உச்சரிப்பும் அவர் காட்டிய குரல் வித்தியாசமும் திரையுலகின் வரலாற்றில் பொன் எழுத்தால் பதிக்கப்படும்.
விஜய், அஜித், சூர்யா, அரவிந்தசாமி உள்ளிட்ட நடிகர்களுக்கும் எஸ்.பி.பி.யின் குரல் வெகுவாகப் பொருந்தியது ஆச்சரியத்திற்குரிய விஷயம்..
அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் எஸ்.பி.பி. பாடியிருந்தாலும் இளையராஜா இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களுடன் எஸ்.பி.பி.யின் பங்களிப்பு மேலும் ஒரு புதிய சகாப்தமாக உருவானது. எஸ்.பி.பி. இளையராஜா -எஸ். ஜானகி கூட்டணியில் அமைந்த பாடல்கள், தமிழ் திரையிசை ரசிகர்களால் ஒரு போதும் மறக்க இயலாதவை.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தானே நடித்தும் இசையமைத்தும் புதிய சாதனைகளை நிகழ்த்தினார். நிழல்கள் படத்தில் இளையராஜாவுக்கே தனது குரலை தந்த அவர் தமது இசையில் வெளியான சிகரம் படத்தில் தமக்கு ஜேசுதாசை பாட வைத்த ரசிகராகவும் விளங்கினார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், உள்பட தென்னக மொழிகளிலும் இந்தியிலும் எஸ்பிபியின் கொடி வானுயரப் பறந்தது.16 மொழிகளில் அந்தந்த மொழியின் தன்மையோடு பாடலைப் பாடுவது எஸ்.பி.பி.யின் தனிச்சிறப்பு..
பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகளையும், 6முறை தேசிய விருதுகளையும், மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றவர் எஸ்.பி.பி. நான்கு பல்கலைக்கழகங்களால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட அவர், ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்றுள்ளார்.
இப்போதும் ஒவ்வொரு இரவிலும் அவரது குரலைக் கேட்டுவிட்டுத் தூங்கச் செல்வோர் பலர் உண்டு. நெஞ்சில் நிறைந்த கானங்கள் மூலம் SPB இன்றும் ரசிகர்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் என்றால் மிகையில்லை.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்பது ஒரு பெயர் மட்டுமல்ல. ஒரு உருவம் மட்டுமல்ல ,ஈடு இணையில்லாத ஒரு தெய்வீகக் குரல். நெஞ்சில் என்றும் மறையாத ஒரு அடையாளம். உருவங்கள் மறையலாம் ஆனால் ஒருபோதும் அவர் அளித்த இசையும் குரலும் உச்சரிப்பும் தமிழக மக்களின் மனங்களில் இருந்து ஒருபோதும் மறையாது.
Comments