அக்.1 முதல் அதிவேக 5ஜி சேவை.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!
டெல்லியில் வரும் அக்டோபர் 1ஆம் தேதியன்று அதிவேக 5ஜி இணைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தியாவில் 5ஜி அலைவரிசைக்கான ஏலம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்த நிலையில், சென்னை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அதிவேக இணைய சேவை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இதனை அடுத்து, 5 ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியான இந்தியா மொபைல் காங்கிரசில் பிரதமர் மோடி, 5 ஜி சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக தொலைத் தொடர்புத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல்துறையில் மாற்றங்கள் கொண்டு வரும் வகையிலும், தொலைதொடர்பு இணைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கிலும் 5ஜி சேவை தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் நாட்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகளை 80 சதவீதம் வரை விரிவுப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஸ்ணவ் அண்மையில் தெரிவித்திருந்தார்.
2023 மற்றும் 2040ஆம் ஆண்டிற்கு இடையில் இந்தியப் பொருளாதாரத்திற்கு 5ஜி சேவை, 36 புள்ளி 4 டிரில்லியன் டாலர்கள் அளவிற்கு பயன் அளிக்கும் என உலகளாவிய தொழில்துறை அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
Comments