கோவையில் 4 இடங்களில் தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு
கோவையில் ஒரே நாளில் 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கூடுதல் டிஜிபி நேரில் ஆய்வு செய்து, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கோவை காந்திபுரத்திலும், குனியமுத்தூரிலும் நேற்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில், குனியமுத்தூர் இடையார்பாளையத்தில் பாஜக பிரமுகர் பரத் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர்.
இந்த சம்பவத்திற்கு ஒரு மணி நேரத்திற்குப் பின், கோவைப்புதூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஆனந்த கல்யாண கிருஷ்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து, காட்டூர்,ராம்நகர், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொடி அதிவிரைவு படையினர் அணி வகுப்பு நடத்தினர். நகர் முழுவதும் விடியவிடிய வாகனத் தணிக்கை நடைபெற்றது.
தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் நேரில் ஆலோசனை மேற்கொண்டார். நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதனிடையே, அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர்மீது கடுமையான பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் திண்டுக்கல், ராமநாதபுரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாஜக பிரமுகர்களின் வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. திண்டுக்கல் அருகே குடைபாறைப்பட்டியில் பாஜக மேற்கு மண்டல தலைவர் செந்தில் பால்ராஜ் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இண்டிகா கார், 5 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
ஈரோடு சத்தியமங்கலம் அருகே பாஜக முன்னாள் நகர பொருளாளரின் காருக்கும் நள்ளிரவில் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதே போல, ராமநாதபுரத்திலும் பாஜக ஆதரவாளரான மருத்துவரின் 2 கார்களுக்கு நள்ளிரவில் மர்ம நபர் தீ வைத்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments