7வதாக திருமணம் செய்யவிருந்த மோசடி பெண், தரகர் உள்ளிட்ட 4 பேருடன் கைது
ஆறு திருமணம் முடிந்து 7வதாக திருமணம் செய்யவிருந்த மோசடி பெண், தரகர் உள்ளிட்ட 4 பேர் நாமக்கலில் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனபாலுக்கும், மதுரையை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் தரகர் பாலமுருகன் மூலம் கடந்த 7ஆம் தேதி திருமணமான நிலையில், திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில், பெண்ணின் அக்கா, மாமா என இருவர் மட்டுமே இருந்துள்ளனர். அதைத்தொடர்ந்து, 9ஆம் தேதி பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகளுடன் சந்தியா மாயமானதால் தனபால் போலீசில் புகாரளித்தார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணத்துக்கு பெண் பார்த்தபோது சந்தியாவின் போட்டோ வந்துள்ளதை அறிந்த தனபால், தரகரிடம் உறவினர்கள் மூலம் வேறு நபருக்கு திருமணம் செய்யவதாக பேசி போன் மூலமே நிச்சயம் செய்த நிலையில், நேற்று காலை, திருச்செங்கோட்டில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி திருச்செங்கோடு வந்த சந்தியா, தரகர் உள்ளிட்ட 4 பேரை சுற்றி வளைத்த தனபால் போலீசிடம் ஒப்படைத்தார். விசாரணையில், சந்தியாவுக்கு தனபாலுடன் சேர்த்து, இதுவரை ஆறு பேருடன் திருமணம் நடந்தது தெரிய வந்தது.
ஒவ்வொரு திருமணத்தின் போதும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு இரண்டு நாள் மாப்பிள்ளையிடம் நெருங்கி பழகிவிட்டு கிடைத்ததையும், புரோக்கர் கமிஷனையும் பெற்று தப்பி செல்வதை தொழிலாக கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
Comments