தி.நகரில் பாதசாரிகளுக்கு இரும்பு பறக்கும் பாலம்.. 600 மீட்டருக்கு விறு விறு..!
சென்னை தியாகராய நகரில் தீபாவளி கூட்டத்தில் சிக்கி திணறாமல் மக்கள் எளிதாக நடந்து செல்ல மாம்பலம் ரெயில் நிலையத்துக்கு சென்று வர ஏதுவாக 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இரும்பாலான பறக்கும் பால பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது...
பண்டிகை காலங்கள் என்றால் சென்னை தியாகராய நகர் மக்கள் கூட்டத்தால் விழிபிதுங்கும் குறிப்பாக மாம்பலம் ரெயில் நிலையத்துக்கு செல்வது என்பதே பாதசாரிகளுக்கு பகீரத பிரயத்னமாக இருக்கும்.
மக்களின் இந்த சங்கடத்தை தீர்க்கும் வகையில் சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில் நிலையத்தை வரையில் 600 மீட்டர் நீளத்திற்கு இரும்பிலான பறக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை தியாகராயநகர் பேருந்து நிலையத்தையும் , மாம்பலம் ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இந்த உயர்மட்ட நடைமேம்பாலத்தில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
30 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் 600 மீட்டர் நீளம் கொண்ட இந்த நடைபாலம் 4 மீட்டர் அகலத்தில் இரும்புத் தூண்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது தி.நகர் பேருந்து நிலையம் முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை நடந்து செல்வோர் நெருக்கடி மிகுந்த காய்கறி மார்க்கெட் பகுதியை கடந்து செல்லும் சூழல் உள்ளது. இப்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் நடைபயணிகள் போக்குவரத்து நெரிசலின்றி தி.நகர் பேருந்து நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் 5 நிமிடங்களில் கடந்து செல்ல முடியும் .
தியாகராயநகர் பேருந்து நிலையம் அருகில் இரு இடங்களில் நடை மேம்பாலத்திற்கான படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாம்பலம் ரயில் நிலைய மேம்பாலத்திலிருந்து எஸ்கலேட்டர் மூலம் இந்த நடைபாலம் இணைக்கப்பட உள்ளது. நடைபாலத்திற்கான மேற்கூரை அமைக்கும் பணிகள் 80 விழுக்காடு நிறைவுற்ற நிலையில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு முன்பாக இப்பாலத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி பணிகள் குழு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் தி.நகர் மேட்லி சாலை , ரயில்வே பார்டர் சாலை உள்ளிட்ட குறுகிய தெருக்களில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குவியும் நிலையில் இந்த நடைமேம்பாலம் பேருந்து நிலையம் மற்றும் மாம்பலம் ரயில் நிலையம் செல்லும் நடைபயணிகளுக்கு பெரியளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments