தேசிய உணர்வின் அடிப்படையில், ராணுவத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ அடையாளங்கள் அகற்றம்.!
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலுக்கு இணங்க, தேசிய உணர்வின் அடிப்படையில், ராணுவத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ அடையாளங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தமது சுதந்திர தின உரையில், காலனித்துவ மனநிலையை கைவிட்டு நாட்டின் வரலாறு மீது பெருமை கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து காலனித்துவ அடையாளங்கள் அகற்றும் பணி பல்வேறு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பிரிட்டிஷ் காலனித்துவ நடைமுறைகள் அகற்றும் பணி நடைபெற்று வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
காலனித்துவ மற்றும் காலனித்துவ காலத்திற்கு முந்தைய காலத்தின் மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள், ராணுவச் சீருடைகள், கணக்குகள் மாற்றப்பட உள்ளதாக ராணுவ ஆவணம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
படையணிகள், ராணுவச் சட்டங்கள், விதிகள், கொள்கைகள், மரபுகள் மாற்றப்படுவதுடன், கட்டடங்கள், நிறுவனங்கள், சாலைகள், பூங்காக்கள், இடங்கள் ஆகியவற்றின் பெயர்கள் மறுபெயரிடப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி, ராணுவ அதிகாரிகளுக்கு சேவைகளுக்கான விருது வழங்குதல் போன்ற நடைமுறைகளிலும் மாற்றம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதுபற்றிப் பேசிய ராணுவ உயர் அதிகாரி ஒருவர், பிரிட்டிஷ் காலனித்துவ பாரம்பரியத்தை அகற்றுவதுடன், பழமையான பயனற்ற நடைமுறைகளில் இருந்து வெளியேற வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.
ராஜ்பத் கடமைப்பாதை என பெயர் மாற்றம், கடற்படையின் கொடி மாற்றம் ஆகியவற்றைத் தொடர்ந்து ராணுவத்திலும் காலனித்துவ அடையாளங்கள் அகற்றப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments