தலைக்கு பதில் கால் வந்தது..! வீடியோ காலில் பிரசவம் விபரீத அரசு மருத்துவர்..! உறவினர்கள் ஆவேச போராட்டம்

0 3176

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த விபரீத மருத்துவரால் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி புஷ்பா.

இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான புஷ்பாவுக்கு செப்டம்பர் 19 ந்தேதி பிரசவம் என்று சூனாம்பேடு இல்லிடு அரசு மருத்துவமனை மருத்துவர் நாட்குறித்து கொடுத்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று புஷ்பா இல்லிடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மதியம் 2:30 மணிக்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அங்கு மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லாத நிலையில் 3 செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். வலியால் துடித்த புஷ்பாவுக்கு மருத்துவர் இல்லாமல் நாமே பிரசவம் பார்த்துவிடலாம் என்று செவிலியர்கள் முயன்றுள்ளனர்.

பிரசவத்துக்கு முந்தைய புஷ்பாவின் ஸ்கேன் ரிப்போர்ட்டில் குழந்தை வயிற்றில் சுற்றிகிடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததை செவிலியர்கள் கண்டுகொள்ளாமல் இந்த விபரீத முயற்சியில் இறங்கி உள்ளனர். தலைக்கு பதிலாக குழந்தையின் இரு கால்கள் வெளியே வந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவரை தொடர்பு கொண்டுள்ளனர்.

அந்த மருத்துவர் வீடியோ கால் மூலம் அந்தப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்க அறிவுரை வழங்கி உள்ளார் மாலை 6 மணிவரை முயன்றும் குழந்தையின் தலை வெளியே வராததால் , தங்கள் வீடியோ கால் முயற்சியை கைவிட்ட செவிலியர்கள், புஷ்பாவை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு என்று கூறி அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆம்புலன்ஸ் சித்தாமூர் அருகில் வரும் போதே இறந்த நிலையில் குழந்தை பிறந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இல்லிடு அரசு மருத்துவமனையின் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமான போக்கால் தங்கள் குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறு ஜென்மம் போன்றது , இதனை உணர்ந்து பணியில் இருக்க வேண்டிய அரசு மருத்துவர் , பொறுப்பற்ற முறையில் வீட்டில் இருந்தே வீடியோ கால் மூலம் விபரீத பிரசவம் பார்த்ததால், குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments