மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் - தேர்தல் ஆணையம்

0 1885
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் - தேர்தல் ஆணையம்

அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கான உச்சவரம்பை குறைக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எழுதியுள்ள கடிதத்தில், அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கான உச்சவரம்பை 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாகக் குறைக்குமாறு யோசனை தெரிவித்துள்ளார். 2 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகப் பெற்ற அனைத்து நன்கொடை விவரங்களையும் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கும்போது, நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மை உருவாகும் என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு அரசியல் கட்சி பெறும் மொத்த நன்கொடையில் 20 சதவீதமோ அல்லது 20 கோடி ரூபாயோ இதில் எது குறைவோ அந்த தொகைக்குள் தான் ரொக்கமாக பெறப்பட வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் வலியுறுத்தி உள்ளார்.

அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் வெளிநாட்டு நன்கொடைகள் நுழைந்துவிடாமல் தடுக்க விவாதம் நடத்தப்பட்டு சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் ராஜீவ்குமார் யோசனை தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், ஒரு நபருக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அளிக்கும் தொகையை காசோலையாகவோ அல்லது மின்னணு பரிமாற்ற முறையிலோ அளிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

சில அரசியல் கட்சிகள் 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ரொக்கமாக நன்கொடை பெற்று பெரும் பணம் திரட்டி விடுவதாக புகார் எழுந்த நிலையில், இந்த முறைகேடுகளை தடுக்கும்வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் யோசனை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments