பிரசவ வலி மாத்திரைகளை போதைக்காக ஊசியில் ஏற்றி கம்பி எண்ணும் மாணவர்கள்..! மெடிக்கலுக்கு சீல் போலீஸ் எச்சரிக்கை..!
கோயம்புத்தூர் ரத்தினபுரியில் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீர் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதை ஏற்றிக் கொள்ளும் விபரீத போதைக்கும்பலை சேர்ந்த 4 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
உயர் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள கோயம்புத்தூரில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். அதில் சில மாணவர்கள் வலிநிவாரண மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்
கோவை ரத்தினபுரி டாடாபாத் 9ஆவது வீதியில் போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்ற 3 பேரை மடக்கிப்பிடித்தனர். கல்லூரி மாணவர்களான அவர்களிடம் இருந்து ஏராளமான வலி நிவாரணி மாத்திரைகளையும், ஊசிப்போட பயன்படுத்தும் சிரிஞ்சுகளையும் போலீசார் கைப்பற்றினர். வலிநிவாரணத்துக்கு பயன்படுத்தும் அந்த மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் சக மாணவர்களுக்கு போதை மருந்தாக ஏற்றி அதிகளவில் பணம் சம்பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வலி நிவாரணி மாத்திரைகளை சிங்காநல்லூரில் உள்ள மருந்து கடை நடத்தி வரும் கரிகாலன் என்பவரிடமிருந்து டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வாங்கி மற்ற மாணவர்களுக்கு சப்ளை செய்ததுதெரியவந்தது. இதையடுத்து மெடிக்கல் உரிமையாளர் கரிகாலன் மற்றும் 3 மாணவர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1,512 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 வயதான மாணவரை மட்டும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும், மற்ற 3 பேரை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.
டாக்டரின் அனுமதி சீட்டு இல்லாமல் இதுபோன்ற வலி நிவாரணி மாத்திரைகளை விற்றால் அந்த கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தின்போது வலி தெரியாமல் இருக்க கொடுக்கக்கூடிய இந்த மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றுவதால் 5 மணி நேரம் வரை அதிக போதை இருக்கும் என போலீசார் கூறுகின்றனர்.
எனவே, இதனை மாணவர்கள் பயன்படுத்துவதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இதுபோன்ற மாத்திரைகளை பயன்படுத்தும்போது சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிப்பதாகவும், போலீசார் தெரிவிக்கின்றனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் தங்கள் குழந்தைகளின் கூட்டாளிகள் சேர்க்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை பெற்றோர் தவறாமல் கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.....
Comments