2ஆம் எலிசபெத் மகாராணியின் உடல் இன்று மாலை நல்லடக்கம்.. லண்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு.!
மறைந்த 2ம் எலிசபெத் மகாராணியின் உடல், இன்று மாலை ராஜ மரியாதையுடன் அவரது கணவர் பிலிப் கல்லறை அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் குவிந்துள்ளதால், லண்டனில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மைரா அரண்மனையில் கடந்த 8ம் தேதி 2ம் எலிசபெத் மகாராணி , தனது 96வது வயதில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல், லண்டன் கொண்டு வரப்பட்டு, வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது. இதில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இன்று காலை தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு, 2ம் எலிசபெத் மகாராணி உடல் வைக்கப்பட்டிருந்த பேழை, வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து ராஜ மரியாதையுடன் இறுதி சடங்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பின்னர் இறுதி சடங்கு தொடர்பான நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு, முக்கிய பகுதிகள் வழியே குதிரை வண்டியில் எடுத்து செல்லப்பட்டு, புனித ஜார்ஜ் தேவாலயம் கொண்டு செல்லப்பட்டு, பிரார்த்தனை நடத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து, ராயல் வால்ட் என்று அழைக்கப்படும் தரைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அடக்க அறையில் கணவரின் பிலிப் கல்லறை அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.இன்று மாலை பிரிட்டன் நேரப்படி காலை 11 மணிக்கும், இந்திய நேரப்படி மாலை சுமார் 4.30 மணிக்கும் இது நடைபெறுகிறது.
இறுதி சடங்கு நிகழ்ச்சியின்போது டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான சத்தத்தால் இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக விமானங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகாராணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டதும், பிரிட்டன் முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் முழுவதும் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இறுதி சடங்கில் சுமார் 10 லட்சம் பேர் வரை பங்கேற்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதால், கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1965ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வின்ஸ்டர் சர்ச்சிள் உடல், அரசு மரியாதைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து தற்போதுதான் முதன்முறையாக அரசு மரியாதைப்படி நல்லடக்கம் செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் சுமார் 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் லண்டன் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Comments