ஆம்னி பேருந்து ஓட்டுனரின் பொறுப்பற்ற வேலையால் பலியான 6 உயிர்கள்..! டாரஸ் லாரி அடித்து தூக்கியது..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்து மீது வேகமாக வந்த டாரஸ் லாரி உரசியதில் சாலையில் நின்ற கிளினர் உள்ளிட்ட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். பாலத்தின் இறக்கத்தில் பொறுப்பில்லாமல் ஆம்னி பேருந்தை நிறுத்தி வலது பக்க டிக்கியில் உடைமைகளை ஏற்றியதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
ஆத்தூர் அருகேவுள்ள பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் தனது உறவுக்கார பெண்ணின் சடங்கு நிகழ்ச்சிக்கு சென்னை செல்வதற்காக அரவிந்த் என்ற ஆம்னி சொகுசு பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
பேருந்து ஓட்டுனர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க , சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் ரவிக்குமார் குடும்பத்தினர் 6 பேர் காத்திருந்தனர். அவர்கள் முன்பதிவு செய்த ஆம்னி பேருந்து வாகனங்கள் வேகமாக கடந்து செல்லும் பாலத்தின் இறக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்ற தயாரானது. முன்னதாக பேருந்தின் வலதுபக்கம் உள்ள பக்கவாட்டு கதவை திறந்து, அதில் பயணிகளின் உடமைகளை க்ளினர் தீபன் என்பவர் ஏற்றிக் கொண்டிருக்க அருகில் ரவிக்குமார் குடும்பத்தினர் நின்றனர்
அந்த வழியாக சென்ற சுப்பிரமணி என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை சாலையில் நிறுத்தி சென்னை செல்ல தயாராக ரவிக்குமார் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது சேலத்திலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு ஆத்தூர் நோக்கி அதிவேகத்தில் சென்ற டாரஸ் லாரி ஒன்று, பாலத்தில் இறக்கத்தில் நின்ற பேருந்தின் வலதுபக்கத்தில் மோதி உரசியபடி சென்றது. மோதிய வேகத்தில் கிளீனர் தீபன், பயணிகள் 6 பேர் , இரு சக்கர வாகன ஓட்டி சுப்பிரமணி ஆகிய 8 பேரையும் அடித்து தூக்கி வீசிய லாரி, 100 மீட்டர் தூரம் கடந்து சென்று நின்றது. லாரியை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் இறங்கி தப்பியோடி விட்டார்.
கிளினர் தீபனின் சடலம் உடல் நசுங்கிய நிலையில் லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. ரவிக்குமார், அவரது தந்தை திருநாவுக்கரசு மற்றும் செந்தில்வளவன், இரு சக்கரவாகன ஓட்டி சுப்பிரமணியன் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விஜயா என்ற பெண் சேலத்துக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். மேலும் 2 பேர், மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொக்லைன் வண்டி கொண்டு வரப்பட்டு, லாரியை தூக்கி, அதன்பிறகே கிளீனர் தீபனின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஆகியோர் இனி இதுபோன்ற கோர விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் ? என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் டாரஸ் லாரி ஓட்டுனரின் கண்மூடித்தனமான வேகம் விபத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும் தேசிய நெடுஞ்சாலையில் , அதுவும் பாலத்தின் இறக்கத்தில் பொறுப்பற்ற முறையில் இண்டிகேட்டர் போடாமல் ஆம்னி பேருந்தை நிறுத்தியதோடு, வலது பக்க டிக்கியை திறந்து உடமைகளை ஏற்ற காரணமாக இருந்த
பேருந்து ஓட்டுனரே மூலக் காரணம் என்று பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சர்வீஸ் சாலைக்குள் சென்று பயணிகளை பத்திரமாக ஏற்றி வரமால், பைபாசில் காத்திருக்க சொன்ன பேருந்து ஓட்டுனரின் சோம்பேறித்தனத்தால் நிகழ்ந்த இந்த விபரீத விபத்துக்கு பேருந்தின் கிளீனர் உள்பட 6 உயிர்கள் பலி கொடுக்கப்பட்டிருப்பது வேதனையின் உச்சம்.
Comments