தெற்காசியாவில் சிறந்த விநியோக கட்டமைப்பு உருவாக்க முயற்சி - பிரதமர் மோடி வேண்டுகோள்..!
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உஸ்பெகிஸ்தானில் சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேசினார். தெற்காசிய பிராந்தியத்தில் சிறந்த விநியோக கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்க வேண்டுமென்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சாமர்கண்டுக்கு பிரதமர் மோடி நேற்றிரவு சென்றார்.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா பரவல் மற்றும் உக்ரைன் போர் நிலவரத்தால் உலகளாவிய விநியோக கட்டமைப்பில் தடைகள் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் உருவாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.
சிறந்த விநியோக கட்டமைப்பை உருவாக்குவதற்கு, சிறப்பான இணைப்பு மற்றும் போக்குவரத்து உரிமைகள் வழங்குவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
உலகில் வளர்ந்து வரும் மிகப்பெரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்வதாக மகிழ்ச்சி தெரிவித்த மோடி, 2022ம் ஆண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 5 சதவீதமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்தியாவை உற்பத்தி மையமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை தமது அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மாநாட்டின் இடையே உஸ்பெகிஸ்தான் அதிபர் Shavkat Mirziyoyev-வும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். துருக்கி அதிபர் எர்டோகனும், பிரதமர் நரேந்திர மோடியும் இருதரப்பு உறவுகள் குறித்து தனியே பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். 2020ம் ஆண்டு கால்வன் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தையடுத்து சீன அதிபர் ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் ஒரே நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டதும், நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதும் இதுவே முதல்முறையாகும்.
2 தலைவர்களும் பேச்சு நடத்திய விவரம் தெரியாத நிலையில், விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments