திமுக எம்.பி மகன் மீது மண் கடத்தல் வழக்கு.. அதிரடி சப் - இன்ஸ் பெக்டர்.. 2 டாரஸ் லாரிகள் பறிமுதல்.!
நெல்லை பழவூர் அருகே கிராவல் மண்ணை கடத்தியதாக திருநெல்வேலி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்தின் மகனுக்கு சொந்தமான 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதிகார பலத்துக்கு அஞ்சாமல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையில் உவரி நாகர்கோயில் சாலையில் விஸ்வநாதபேரி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
11 லாரிகள் சிக்கிய நிலையில் 9 லாரிகள் போலீசாருக்கு போக்குகாட்டி தப்பிச்சென்று விட்டது
2 டாரஸ் லாரிகள் மட்டும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டது. அதில் அரசு அனுமதி சீட்டு இன்றி தலா 5 டன் கிராவல் மண் கடத்தப்படுவது தெரியவந்தது.
இதனை அடுத்து லாரியை ஓட்டி வந்த ரமேஷ் மற்றும் ஜெயபாலன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை பிடித்து பழவூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தியதில் அந்த இரண்டு லாரிகளின் உரிமையாளர் திருநெல்வேலி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் என்பவரது மகன் தினகரன் என்று தெரிவித்தனர்.
இதனை அடுத்து லாரிகளை விடுவிக்க கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இரு தினங்களுக்கும் மேலாக லாரிகள் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பழவூர் காவல் உதவி ஆய்வாளர் கண்ணன் உறுதியான முடிவெடுத்தார்.
திருட்டு மணலுடன் டாரஸ் லாரிகளை ஓட்டி வந்த இரு ஓட்டுநர் மீதும், லாரியின் உரிமையாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தின் மகன் தினகரன் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இரு ஓட்டுனர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் திமுக எம்.பியின் மகனையும், வாகன சோதனையில் தப்பிச்சென்ற லாரிகளையும் போலீசார் தேடிவருவதாக கூறப்படுகின்றது.
எம்.பி யின் மகன் என்று அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையிலும் துணிச்சலுடன் நடவடிக்கை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் கண்ணனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
Comments