8 விக்கெட் அவுட் 2 பேர் வெயிடிங் கல்யாண ராணி பராக்..! அழகான பெண்ணுக்கு ஏமாந்த அழகர்கள்

0 14739

கரூரில் 8 பேரை திருமணம் செய்தும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ய இருந்த புது மாப்பிள்ளை கையும் களவுமாக காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்துள்ளார். 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதி விநாயகர் கோவில் சந்துவில் வசித்து வந்த செளமியா என்ற சபரி. காந்திகிராமத்தில் வீடு எடுத்து வசித்து வரும் அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், மறுமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அக்கம்பக்கத்தினரிடம் கூறி வந்துள்ளார்.

இதனை நம்பிய பக்கத்து வீட்டு பெண் ஒருவர் தனது உறவினரான ஆட்டோ ஓட்டுனர் சிவக்குமாருக்கு சௌமியாவை மணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.

தாம் ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவதாக சிவக்குமாரிடம் கூறிய சௌமியா தமக்கு அமைச்சரை தெரியும் என்றும் அவர் மூலம் சிவக்குமாருக்கு வேலை வாங்கித் தருவதாகவும் முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.

இதனை நம்பிய சிவக்குமார் குடும்பத்தினர் 10 ஆயிரம் பணத்தை சௌமியாவிடம் கொடுத்துள்ளனர். மேலும், தங்களது உறவினர்கள், நண்பர்கள் என 20 நபர்களுக்கு அரசு வேலை பெறுவதற்காக முன்பணமாக 10 லட்சம் ரூபாய் வரை சௌமியாவிடம் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில் கரூருக்கு வந்த சிவக்குமாரை அழைத்துச் சென்று அங்குள்ள பெரிய பங்களாவை காட்டி அது, தமது தாயாரின் வீடு என்றும் தாம் காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் சௌமியா கூறியுள்ளார்.

இந்நிலையில் மணப் பெண் பற்றி விசாரிக்குமாறு கரூரில் உள்ள உறவினருக்கு சௌமியாவின் போட்டோ ஒன்றை சிவக்குமார் அனுப்பியுள்ளார். சௌமியாவின் பெற்றோரிடம் விசாரித்த போது தங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

சௌமியா காட்டிய அந்த பெரிய பங்களாவும் அவருக்கு சொந்தமில்லை என்பதை தெரிந்து கொண்ட உறவினர் சிவக்குமாரிடம் இந்த தகவல்களை சொல்லி எச்சரிக்கை செய்துள்ளார். கரூரில் வீட்டு உரிமையாளரை சிவக்குமார் சந்தித்தபோது அவரும் 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சிவக்குமார் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சௌமியா தங்கி இருக்கும் வீட்டினுள் சென்று அவரை குண்டுகட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் சௌமியாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 பேரை திருமணம் செய்து, லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய சௌமியா, வரும் ஞாயிறன்று சிவக்குமாரையும், அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை கோவையை சார்ந்த மற்றொரு இளைஞரையும் திருமண செய்ய இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments