காதலை மறக்க முடியாமல் புதுப்பெண் தற்கொலை.. மனைவியின் பிரிவால் உயிரை விட்ட கணவன்!

0 5478

காதலை மறக்க முடியாமல் பெற்றோர் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்ட பெண், தாய் வீட்டிற்கு விருந்துக்கு சென்றபோது தற்கொலை செய்து கொண்ட நிலையில், மனம் உடைந்த கணவனும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் நிகழ்ந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் குந்தலம்பட்டு முருகன் என்பவருக்கும், செவரப்பூண்டியைச் சேர்ந்த சந்தியாவுக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு மறுவிருந்துக்காக புதுமணத் தம்பதிகள் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் காலை சந்தியா திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். மருத்துவர்களின் பரிசோதனையில் சந்தியா எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.சந்தியாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையுடன், கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிப்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்தியாவின் கணவர் முருகன் குந்தலம்பட்டில் உள்ள தனது வீட்டுக்கு சென்று வருவதாக கூறி மாமனார் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால், வீட்டிற்கு செல்லாமல் வயல்வெளியில் இருந்த பம்ப்செட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சோமஸ்பாடியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் ஆன நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக ஒரு மாதத்திலேயே சந்தியா தாய் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அதன்பின்னர்,
செவரப்பூண்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான ஏழுமலை என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், முருகனை திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டு 9ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. சந்தியாவுக்கு விருப்பம் இல்லாத நிலையில் அவரின் பெற்றோர்கள் வற்புறுத்தலால் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.

சந்தியா உயிரிழந்த தகவலை அறிந்து அவருடன் தொடர்பில் இருந்த ஏழுமலை என்பவர் லாரியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருமணமான ஆறே நாட்களில் புதுமணத் தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments