குலசை தசராவில் ஆபாச குத்தாட்டத்திற்கு நீதிமன்றம் தடை..! சினிமா பாடல்களை ஒலிபரப்ப கூடாது

0 9083

குலசை தசரா விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து சினிமா நடிகைகளை அழைத்துச்சென்று சினிமா பாடலுக்கு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்த நிலையில்  இந்த ஆண்டு அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு  உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை வித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

தசரா குழுக்களுக்குள் ஏற்பட்ட போட்டியால் , பொது மக்கள் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, பார் நடன மங்கையர், சினிமா துணை நடிகைகள், சின்னத் திரை நாடக நடிகைகளை அழைத்து வந்து, சினிமா பாடல்களுக்கு ஆபாசமாக உடையணிந்து ஆட வைத்தனர்

குலசை தசரா என்றால் சினிமா நடிகைகளின் குத்தாட்டம் என்று சொல்லும் அளவுக்கு அவர்களது ஆட்டம் மோசமானது. இதற்கென்றே சில லட்சங்களை கொட்டிக் கொடுத்து அழைத்து வரப்பட்ட சினிமா கலைஞர்களின் ஆட்டத்தால் வீதிகள் குலுங்கியது.

மைசூர் போல் பல வெளி நாட்டு பார்வையாளர்களை ஈர்க்க வேண்டிய குலசை தசரா ஆன்மீக திருவிழாவின் மதிப்பு, சிலருடைய செயல்களால் குறைந்து வருவதாகவும், எனவே ஆன்மீக நிகழ்ச்சியான குலசை தசரா நிகழ்ச்சிகளில் பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா குத்துப்பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, குலசை தசரா விழாவின் போது பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருவிழா தொடங்குவது முதல் முடியும் வரை நேரில் சென்று கண்காணித்து, பக்திப்பாடல்கள் அல்லாத பாடல்கள் ஒலிபரப்பப் படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியரும் இதனை உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் கோவில் திருவிழாக்களில், கலைநிகழ்ச்சிகள் எனும் பெயரில் ஆபாச நடனங்கள் ஆடுவதையும், பாடல்களை இசைப்பதையும் அனுமதிக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான உத்தரவை பிறப்பிப்பதாகவும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments