உன்ன பார்க்கனும் போல இருக்கு..! ரெயில் ஏறி வந்த காதலியால் ஓட்டம் பிடித்த காதலன்..! போலீஸ் முயற்சியால் கெட்டி மேளம்
ஆந்திராவில் இருந்து கடலூருக்கு முக நூல் காதலனை தேடி வந்து மொழி தெரியாமல் தவித்த பெண்ணை விசாரணைக்கு அழைத்துச்சென்ற பெண் காவல் ஆய்வாளர் ஒருவர், அந்த பெண்ணுக்கு பட்டுப்புடவை எடுத்து கொடுத்து, சீர்வரிசை பொருட்கள் வாங்கிக் கொடுத்து காதலனுடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.
கடலூர் அருகே உள்ள பெரியகங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் வெங்கடேஷ். இவருக்கும், ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த 21 வயது பெண் சுஜிதா என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் காதலாக மாறி இருவரும் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்துள்ளனர். அப்போது உன்ன பார்க்கனும் போல இருக்குன்னு காதலியிடம் வெங்கடேஷ் கூறி வந்துள்ளார். நேரம் வரும் போது பார்க்கலாம் என்று முக நூலிலேயே காதலுக்கு கோட்டை கட்டி உள்ளது இந்த ஜோடி.
இதற்கிடையே சுஜிதாவின், பெற்றோர் அவரது காதலை ஏற்காமல் வேறு இடத்தில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் எதிர்ப்பை மீறி தனது காதலனை கரம்பிடிக்க முடிவு செய்த சுஜிதா ஆந்திராவில் இருந்து ரெயில் ஏறி திங்கட்கிழமை நள்ளிரவு கடலூர் வந்தார்.
திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் வந்து இறங்கிய சுஜிதா, தன்னை பார்க்க ஆவலாய் காத்திருப்பதாக கூறிய காதலனை செல்போனில் அழைத்து தான் நேரடியாக வந்திருப்பதாக கூறியதும், வருவதாக கூறி அலைக்கழித்த வெங்கடேஷ் அந்த பெண்ணை ரெயில் நிலையத்திலேயே தவிக்க விட்டதாக கூறப்படுகின்றது.
மொழி தெரியாமல் அங்கேயே சுற்றித்திரிந்த சுஜிதாவை மீட்ட ரெயில்வே போலீசார் , கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் தான் கடலூரை சேர்ந்த தனது முக நூல் காதலன் வெங்கடேசை தேடி வந்ததை தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார், வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். உன்ன பார்க்கனும் போல இருக்குன்னு பேச்சுக்கு சொன்னா, உடனே ரெயில் ஏறி வந்தால், எப்படி கல்யாணம் செய்ய முடியும் ?என்று அதிருப்தி தெரிவித்த வெங்கடேஷ் சுஜிதாவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார்.
சுஜிதாவோ, மணந்தால் முக நூல் காதலனைத் தான் மணப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து போலீசார், வெங்கடேஷின் குடும்பத்தாரை வரவைத்து பேச்சுவார்த்தை நடத்தி வெங்கடேஷை சமாதானப்படுத்தினர்.
கல்யாண செலவுக்கு கூட காசில்லை என்று சாக்கு சொன்னதால் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தனது சொந்த செலவில் மணப்பெண்ணுக்கு பட்டுப்புடவை எடுத்து கொடுத்து எளிய முறையில் குடும்பம் நடத்த தேவையான சீர்வரிசை பொருட்களையும் வாங்கி கொடுத்து வெங்கடேசுக்கும், சுஜிதாவுக்கும் திருப்பாதிரிப்புலியூர் நாகம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தார்.
முகநூல் காதல் அந்தப்பெண்ணை முச்சந்தியில் நிறுத்தினாலும் , நிற்கதியாய் நின்ற பெண்ணுக்கு, நல்ல மனம் கொண்ட பெண் காவலர்களின் முயற்சியால், இருமணம் இணைந்த திருமணம் நடந்துள்ளது.
Comments