ஷாங்காய் உச்சி மாநாட்டில் மோடி-புதின்-ஜி.ஜின்பிங் சந்திப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று உஸ்பெகிஸ்தான் பயணம் மேற்கொள்கிறார். மாநாட்டிற்குப் பின் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
உலகமெங்கும் பெருமளவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
அதில் பயங்கரவாதத்துக்கு எதிராகவும், பொருளாதார ரீதியில் ஒத்துழைப்பது தொடர்பாகவும் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் ஏற்கனவே வந்து சேர்ந்துள்ளனர். பிரதமர் மோடியும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் இன்றும் நாளையும் பங்கேற்க உள்ளார்.
உறுப்பினர் நாடுகளின் தலைவர்களுடன், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பும், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியும் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பலவேறு நாடுகளின் தலைவர்களை வரவேற்க மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சமர்கண்ட் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டின் இடையே பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். மின் உற்பத்தி பகிர்வு, உணவுப் பாதுகாப்பு, கச்சா எண்ணெய் ஏற்றுமதி , பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங்- ஆகியோருடனான பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments