இப்ப இந்த பிசினஸ் தான் ஓடுது.. கட்டு கட்டாக கள்ள நோட்டுகள்..! மக்களே உஷார்..!

0 5454
இப்ப இந்த பிசினஸ் தான் ஓடுது.. கட்டு கட்டாக கள்ள நோட்டுகள்..! மக்களே உஷார்..!

ஆந்திராவில் இருந்து கொரியர் மூலமாக கள்ள ரூபாய் நோட்டுக்களை வரவழைத்து கடைகளில் புழக்கத்தில் விட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ள நோட்டை புழக்கத்தில் விடுவதற்கு வங்கியில் கடன் வாங்க திட்டமிட்ட பிசினஸ் மேக்னட்டின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை கிண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் , கொரியர் மூலமாக அவை பரிமாற்றம் நடைப்பெறுவதாகவும் போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அனைத்து கூரியர் நிறுவனங்களையும் போலீசார் உஷார் படுத்தி இருந்தனர்.

பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்திற்கு வந்த சந்தேகத்துக்கிடமான பார்சலை ஸ்கேன் செய்த போது அதில் கட்டுகட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அந்த பார்சலை சோதனையிட்ட போது அதில் இருந்தது எல்லாம் 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது.

ஹைதராபாத்தில் இருந்து சென்னை வேளச்சேரியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு அந்த பார்சல் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததால் சதீஷை பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

பேஷன் டிசைனராக பணியாற்றி வந்த சதீஷ் கடந்த 4 வருடங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல், அவருடைய மனைவியின் வருமானத்தில் ஹவுஸ் ஹஸ்பண்டாக காலத்தை ஓட்டி வந்துள்ளார். குறுக்கு வழியில் பணக்காரணாக திட்டமிட்ட அவர் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் தேடிப்பிடித்து, பேக் கரண்சி என்ற இன்ஸ்டா பக்கத்தை பின் தொடர்ந்துள்ளார் .

50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் தரப்படும் எனக்கூறியதால் நண்பர்களிடம் கடன் வாங்கி முதலில் 2 ஆயிரம் ரூபாய் செலுத்தி 6 ஆயிரம் ரூபாய்க்கு 100 மற்றும் 200 ரூபாய் கள்ளநோட்டுகளை கூரியர் மூலமாக வரவழைத்து சிறு கடைகள் மற்றும் மதுபான கடைகளில் புழக்கத்தில் விட்டுள்ளார்.

அந்த பணத்தை புழக்கத்தில் விடும் போது எவ்வித சிக்கலும் வராமல் பிசினஸ் பிரமாதமாக போனதால், மீண்டும் ஐதராபாத் ஏஜண்டை தொடர்பு கொண்டு 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி 18 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை கூரியர் மூலமாக வரவழைத்த போது சிக்கி கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் 3 இலட்ச ரூபாய்க்கு வங்கியில் சிறு தொழில் கடன் பெற்று அதனை கொடுத்து 9 இலட்சம் ரூபாய்க்கு கள்ள நோட்டுகளை வாங்கி பிசினஸை விரிவாக்க திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் சதீஷ்

ஹைதராபாத்தை சேர்ந்த சுஜீத் என்பவர் மூலமாக இந்த பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதாகவும், தன்னை போலவே தமிழகத்தில் இருந்து பலர் சுஜித்திடம் கள்ள ரூபாய் நோட்டுக்களை பெற்று வருவதாகவும், சென்னையில் மட்டுமே 5 க்கும் மேற்பட்டோர் சுஜித்தோடு தொடர்பில் இருப்பதாகவும் சதீஷ் தெரிவித்துள்ளார்

100 ரூபாய்,200 ரூபாய் ,500 ரூபாய் கள்ள நோட்டுகள் ஒரிஜினல் ரூபாய் நோட்டுகள் போலவே இருப்பதாகவும் அவற்றை எளிதாக மாற்ற முடியும் என்பதால் ஆர்டர் செய்து கேட்டு வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார் சதீஷ். அவரிடம் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சதீஷுக்கு கள்ள ரூபாய் நோட்டுக்களை அனுப்பி வைத்த சுஜீத்தை பிடிக்கவும் அவருடன் தொடர்பில் உள்ளவர்களை பிடித்து விசாரிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments