86 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.!
தமிழ்நாட்டில் உள்ள 14 அரசியல் கட்சிகள் உட்பட 253 கட்சிகள் செயலற்றவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 கட்சிகள் உள்பட 86 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் மீது பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் , தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே தலைமையிலான ஆய்வுக் குழுவில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, உத்தரப் பிரதேசம், பீகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்குழு நடத்திய ஆய்வை அடுத்து 86 அரசியல் கட்சிகளின் தகுதி நீக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 அரசியல் கட்சிகள் உட்பட 253 கட்சிகள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தக் கட்சிகள் 2014 முதல் 2019 வரை சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடவில்லை.இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கும் பதிலளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் ரத்து செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் போது தேவையற்ற குழப்பங்களைப் போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மே 25 வரை நிலவரப்படி, இதுவரை 537 கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Comments