முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை!
சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 39 இடங்களில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையின் மைல்கல் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, முன் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியவவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்திய போலீசார், அதற்கு மறுப்பு தெரிவித்த 7 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.
சென்னையில் புரசைவாக்கம் சாலையில் உள்ள முருகன் எலக்ட்ரிகல் டிரேடர்ஸ், தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள எலக்ட்ரிகல் கடை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கேசிபி இன்ஜினியரிங் நிறுவன அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களில் முக்கிய ஆவணங்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் பெரியார் நகரில் வசித்து வரும் சமிக்ஷா நிறுவனத்தின் உரிமையாளர் சுதாகர் என்பவரது வீட்டிலும், தெப்பக்குளத்தில் உள்ள கணேஷ் டிரேடர்ஸிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு கோகுலபுரம் தெருவில் வசித்து வரும் ஒப்பந்ததாரரான கணேஷ்குமார் என்பவரது வீட்டில் விழுப்புரத்தில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவினர் அப்பகுதியில் கூடினர்.
சென்னையில் அடையாறு உள்ளிட்ட 5 இடங்களில் முக்கிய ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரியில் ஆறு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், அக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பான சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், சேலம் சீரங்கபாளையம், பழனியப்பா நகர், சுப்பிரமணிய நகர் உள்ளிட்ட இடங்களில் வசித்து வரும் மூன்று அரசு மருத்துவ பேராசிரியர்கள் இல்லங்களிலும் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
தேனியில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக பணியாற்றி வரும் பாலாஜி என்பவரது அலுவலகம், குடியிருப்பு பகுதிகளில் எட்டுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதேபோல், மதுரையில் புதூர் - ஜவகர்புரம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ளமருத்துவர் பாலாஜி என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில் ஒன்றும் கைப்பற்றாத சூழ்நிலையிலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
Comments