மைக்ரோஓவன் இங்கிருக்கு.. 400 கிராம் தங்கம் எங்கிருக்கு..? அதான் சார் தெரியவில்லை.. குருவியை கும்மிய கடத்தல் கும்பல்..!

0 3641

துபாயில் இருந்து மைக்ரோ ஓவனுக்குள் வைத்து கடத்தப்பட்ட 400 கிராம் தங்கத்தை எடுத்து உருக்குவதாக கூறிச்சென்று , தங்கத்தை அப்படியே அபேஸ் செய்த காவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சிலரை அடைத்து வைத்து ஒரு கும்பல் சித்ரவதை செய்வதாக விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற அரும்பாக்கம் போலீசார் கடத்தியவர்களை கைது செய்து, கடத்தப்பட்டவர்களை மீட்டனர்.

விசாரணையில் கடத்தல் தங்கத்துக்காக நடந்த கேங் வார் வெளிச்சத்திற்கு வந்தது. திருத்தனியைச் சேர்ந்த குருவி ஆனந்தராஜ் என்பவரிடம் , துபாயைச் சேர்ந்த ஹஸன் பாஷா என்பவர் மைக்ரோ ஓவனிற்குள் 400 கிராம் எடையுள்ள தங்கத்தை உருக்கி மறைத்து வைத்து கொடுத்து அனுப்பி உள்ளார்.

அந்த மைக்ரோஓவனை காரைக்காலை சேர்ந்த சிலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆனந்தராஜிடம் சொன்னதோடு கமிஷனாக 30 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. உஷாரான ஆனந்தராஜ், அந்த தங்கத்தை உரியவரிடம் சேர்க்காமல் தலைமறைவான நிலையில் காரைக்காலைச் சேர்ந்த அந்த தங்க கடத்தல் கும்பல் ஆனந்த் ராஜையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆனந்தராஜின் சகோதரர்கள், நண்பர்கள் என 5 பேரையும் கடத்திச் சென்று கும்மி எடுத்துள்ளனர்.

இதையடுத்து ஆனந்தராஜ் கும்பலை கடத்திச்சென்று விடுதியில் வைத்து தாக்கிய வழக்கில் காரைக்காலைச் சேர்ந்த இதயத்துல்லா, பாலகன், ஆற்காட்டு ரவிக்குமார், தினேஷ், நவீன் குமார் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் பிஎம்டபிள்யூ காரையும் பறிமுதல் செய்தனர்.

மைக்ரோ ஓவனில் வைத்து மறைத்து கடத்தி வரப்பட்ட 400 கிராம் தங்கம் எங்கே ? என ஆனந்தராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தங்கத்தைச் அபகரிக்கலாம் என திட்டமிட்டு அடையாறில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி மைக்ரோ ஓவனை உடைத்து பார்த்ததாகவும் ஆனால் அதில் தங்கம் எதுவும் இல்லாததால் அங்கிருந்து சென்றுவிட்டதாக ஆனந்தராஜ் அண்ட் கோ கூறியுள்ளனர்.

ஆனந்த ராஜ் சொன்ன தகவலை நம்பாத அரும்பாக்கம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மைக்ரோ ஓவனில் உள்ள தங்கத்தை எடுக்க ஆனந்தராஜூவின் சகோதரர் ஷாம் என்பவருக்கு தெரிந்த வினோத் என்ற நபரை அணுகியதாகவும், அவர் மூலம் பரங்கிமலை காவல் நிலைய காவலர் விமலிடம் உதவிக் கேட்டுள்ளனர்.

இதையடுத்து மைக்ரோ ஓவனை கொண்டுச் சென்று சவுக்கார்ப்பேட்டையில் தனக்கு தெரிந்த தங்க வியாபாரியிடம் உடைத்து உருக்கிய தங்கத்தை எடுத்துவருவதாக கூறிச் சென்றுள்ளார் விமல். அங்கு வைத்து மைக்ரோ ஓவனை உடைத்து பார்த்ததாகவும் ஆனால் அதில் தங்கம் இல்லை என காவலர் விமலும், உடன் சென்ற வினோதும் கூறியதாக ஆனந்த ராஜ் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து காவலர் விமலையும், அவரது நண்பர் வினோத்தையும் பிடித்து அரும்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில் காரைக்கால் கும்பலை ஆனந்தராஜ் ஏமாற்ற நினைத்தது போல, ஆனந்த்ராஜ் அண்ட் கோவிடம் தங்கம் இல்லை என்று பொய் சொல்லி விட்டு மைக்ரோ ஓவனுக்குள் இருந்த 400 கிராம் தங்கத்தை காவலர் விமலும், அவரது நண்பர் வினோத்தும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அரும்பாக்கம் போலீசார் காவலர் விமல் மற்றும் வினோத் திருடிய தங்கத்தை விற்க உதவிய ஸ்ரீதர் ஆகிய மூவரையும் கைது செய்து திருடப்பட்ட தங்கத்தை மீட்டுள்ளனர்.

எத்தனுக்கு எத்தன் பூலோகத்தில் உண்டு என்பதற்கு சாட்சியாய் மாறி இருக்கின்றது இந்த தங்கக்கடத்தல் சம்பவம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments