பணத்துக்காக கணவனுக்கு திருமணஜோடி தேடிய களவாணி மனைவி கைது..!
கோவையில் சுங்க இலாக்கா அதிகாரி எனக்கூறி மனைவியின் துணையுடன் நகை பணத்துக்காக வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற சம்பவத்தில் மோசடி கணவன் மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்...
கோவை அருகே உள்ள வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் ராமு. ஒரு தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். ராமு திருமண தகவல் மையம் மூலம் கிடைத்த தகவலின் பேரில் 31 வயது பெண்ணின் கைபேசி எண்ணை தொடர்பு கொண்ட ராமு, தான் சுங்க இலாகாவில் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை பிரிந்து வாழ்வதாக தெரிவித்துள்ளார். அந்தப்பெண்ணிடம். உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன், உங்களுக்கு சம்மதமா ? என்றும் கேட்டு உள்ளார்.
அதற்கு தனக்கும் திருமணமான ஒருசில மாதங்களிலேயே கணவர் பிரிந்துவிட்டார். எனவே உங்களை திருமணம் செய்ய எனக்கு முழு சம்மதம் என்று அந்தப்பெண் கூறி உள்ளார். இதையடுத்து 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி பழகிய நிலையில் , 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்
திருமணத்துக்காக இருவரும் ஒன்றாக சென்று 50 ஆயிரம் ரூபாய்க்கு ஆடைகள் எடுத்துள்ளனர். அதற்கான தொகையை அந்தப்பெண்ணே செலுத்தி உள்ளார். அந்தப்பெண்ணிடம் நிறைய பணம் இருப்பதை தெரிந்து கொண்ட ராமு, அவசர தேவை என்று 25 ஆயிரம் ரூபாய் கேட்டதோடு,அதனை முன்னாள் மனைவியின் வங்கி கணக்கிற்கு அனுப்பக் கூறி இருக்கின்றார். அந்தப்பெண்ணும் அனுப்பி வைத்துள்ளார்.
துணிக்கடையில் வைத்து நீண்ட நேரம் செல்போனில் ராமு பேசிக் கொண்டிருந்த நிலையில், அது யார் எனக் கேட்டதால் தனது முன்னாள் மனைவி லட்சுமி பேசுவதாக கூறி செல்போனை கொடுத்துள்ளார். அதில் பேசிய லட்சுமியோ, திருமண வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, இனி நான் ராமுவை போனில் தொடர்பு கொள்ள மாட்டேன் என உறுதியளித்துள்ளார்.
ராமுவின் நடவடிக்கை மற்றும் அந்தப் பெண்ணின் பேச்சு ஆகியவற்றில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து ராமுவை வழியனுப்பி வைத்து விட்டு ரகசியமாக பின் தொடர்ந்துள்ளார். இதில் தன்னை சிங்கிள் என கூறிவந்த ராமு தனது மனைவி லட்சுமி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்வதை கண்டுபிடித்த பெண், இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் ராமு, சுங்க இலாகா அதிகாரி இல்லை என்பதும், மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறி அந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்றதும், அதற்கு அவரது மனைவி லட்சுமி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதற்கு முன்பு சில பெண்களை இருவரும் சேர்ந்து பணம் நகை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. ராமு மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி வழக்கு உள்ளதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் ராமு மற்றும் அவரது மனைவி லட்சுமி
ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுங்க இலாகா அடையாள அட்டை, ஆடைகள் உள்ளிட்ட போலி ஆவணாங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Comments