ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு.. உஸ்பெகிஸ்தான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.!
பிரதமர் மோடி வருகிற 15ஆம் தேதி உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். அப்போது அவர் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் செல்கிறார். அங்கு 15 ஆம் தேதி தொடங்கும் 2 நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். கடந்த இருபது ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பு அமைப்பின் மூலம் நிகழ்ந்த மாறுதல்களை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.
இக்கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி சீன அதிபருடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயினும் இது குறித்து சீனா தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
மோடி-ஜி ஜின்பிங் சந்திப்புக்கு முன்னோட்டமாக லடாக் எல்லையின் சில பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளது, பேச்சுவார்த்தைக்கான இணக்கமான சூழலை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இந்த 2 நாள் மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினையும் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் இருநாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத எதிர்ப்பு, மற்றும் ஆப்கான் நிலவரம் ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக இம்மாநாட்டில் இடம் பெறுகிறது
Comments