2000 ஆடுகள்.. 5000 கோழிகள்.. 1 லட்சம் பேருக்கு விருந்து..! 50 மொய் கவுண்டர் வைத்த அமைச்சர்..!
மதுரையில் மகன் திருமணத்தில் பிரம்மாண்டம் காட்டிய வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி. 2000 ஆடுகள், 5000 கோழிகள் என தொகுதி மக்கள் 1 லட்சம் பேருக்கு விருந்து வைத்து அசத்தினார்.
மதுரை பாண்டி கோவில் அருகே உள்ளக் கலைஞர் அரங்கில் மிக பிரம்மாண்டமாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தியின் மூத்த மகன் தியானேஷ்- ஸ்மிர்தவர்ஷினி திருமண விழா நடந்தேறியது.
இந்த விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமை ஏற்று தாலியை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். விழாவில் முதல்வர் பேசத் துவங்கிய போது ஒரு கல்லில் இரு மாங்காய் அடிப்பார்கள் என்று சொல்வார்கள்.
ஆனால், அமைச்சர மூர்த்தி ஒரு கல்லில் பல மாங்காய் அடிப்பார் எதையும் அவருக்கு சிறியதாகச் செய்ய தெரியாது பிரம்மாண்டமாகத்தான் செய்யத் தெரியும், திருமண விழாவை ஓர் மண்டல மாநாடு போல ஏற்பாடு செய்துள்ளார் என புகழ்ந்தார். ஆம் உண்மைதான. அதேபோல் தான் திருமணமும் நடந்தது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களின் அறைகளையும் அமைச்சர் மூர்த்தி பல மாதங்களுக்கு முன்பே புக் செய்து வைத்தார். அவரின் அழைப்பினை ஏற்று அமைச்சர்கள், கட்சியின் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் என பலர் திருமணத்திற்காக மதுரை வந்திருந்தனர். அவர்களை ஆச்சரியப்படும் விதமாக மிகப்பிரமாண்டமான அரங்கம் ஒன்றை பாண்டி கோவில் அருகே தயார் செய்து இருந்தார் அமைச்சர் மூர்த்தி.
திருமணத்திற்கு உள்ளே அமர்ந்திருக்கும் முக்கிய பிரமுகர்கள் மத்தியில் கடோத்கஜன் உடை அணிந்த நபர் வலம் வந்தார். மணமக்களுக்கு அர்ச்சதை போடவும் ஓர் சிறிய பெட்டியில் அரிசி வழங்கப்பட்டது அதிலும் ஒரு பிரம்மாண்டம். முகப்பில் இருந்து திருமணம் மண்டப நுழைவு வாயில் முழுவது ஆயிரம் ஆயிரம் கரும்புகள், வாழை மரம், இளநீர் தோரணமும் இருந்தன.
அதேபோல ஒரு லட்சம் பேர் பங்கேற்க அழைப்பு என்பது விடுக்கப்பட்டிருந்தது. பத்தாயிரம் பேர் அமர்ந்து திருமணத்தை பார்க்கும் விதமாக இருக்கைகள் முக்கிய பிரமுகர்களுக்கு தனியாகவும், கட்சியினர், தொகுதி பொதுமக்களுக்கு தனியாக ஏற்பாடுகள் இருந்தன. ஒருபுறம் நாதஸ்வரம்,மேளதாளம், ஒருபுறம் சூப்பர் சிங்கர் இசைக்கச்சேரி என எடுத்த எடுப்பில் எல்லாம் பிரம்மாண்டத்தை காட்டியிருந்தார். அமைச்சர் மூர்த்தி.
கேரளா முறைப்படி காலை ஹார்ட் இட்லி, இடியாப்பம், நெய் தோசை, பூரி,கொண்டக்கடலை கூட்டு, ஹல்வா,பொங்கல் உணவும், தமிழ்நாட்டின் முறைப்படி மதியம் சைவமும், சிக்கன், மட்டன் கறி விருந்து ஏற்பாட்டு வரிசை கட்டி இருந்தது. அதிலும் 2000 ஆடுகளும் 5 ஆயிரம் கோழிகளும் சமைத்து, மகன் திருமணத்திற்கு வருகை தந்தோருக்கு விருந்தாக படைத்தார்.
அதேபோல் மொய் வழங்க கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக 50 மொய் கவுண்டர்களை அமைத்து இருந்தார். சமீபத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பிரம்மாண்டத் திருமணம் ஆக அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணம் நடந்தேறி உள்ளது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிச் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் மூத்த அமைச்சர்கள் கே.என் நேரு எ.வ வேலு, மா சுப்பிரமணியன், டி ஆர் பாலு, சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவை சகாக்கள், தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் அனைவரும் திருமணத்தில் அட்டனன்ஸ் கொடுத்தனர்.
மேடையில் பேசிய மூர்த்தி நான் என்றும் திமுகவிற்கு கடமைப்பட்டவனாக இருப்பேன், என்னை அமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்ய திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி, 45 ஆண்டுகளாக திமுகவின் தொண்டனாக செயல் ஆற்றி வருகிறேன் எனக்கு பதவியை கொடுத்து அழகு பார்த்தவர் தலைவர் என்றும் நம்பிக்கைக்கு உரியவனாக நானும் என் குடும்பமும் இருப்போம் தலைவரே என கண்கலங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் பேசி முடித்து கிளம்பிச் சென்ற பிறகு மக்கள் தோரணமாக வைக்கப்பட்டு இருந்த கரும்பு,.வாழை தாரையும், இளநீரையும் கட்டுக் கட்டாக தூக்கிச் சென்றனர்.
Comments