50 ஆண்டுகளுக்கு பின் பால்வள மாநாடு.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

0 2942
50 ஆண்டுகளுக்கு பின் பால்வள மாநாடு.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

உலக பால்வள உச்சிமாநாட்டை டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளரான இந்தியா, சர்வதேச அளவிலான பால் உற்பத்தியில் 23 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் உலக பால்வள உச்சிமாநாட்டை நாளை காலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

நாளை முதல் வரும் 15ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில், 'ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்திற்கு பால்வளம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் தொழில்துறை தலைவர்கள், வல்லுநர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.

இதில் 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 500 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர், இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1974ஆம் ஆண்டு இந்த உச்சிமாநாடு நடைபெற்றது.

பெண்கள் மற்றும் சிறிய, விளிம்பு நிலையில் உள்ள பால்வள விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் கூட்டுறவு மாதிரியை அடிப்படையாகக் கொண்டிருப்பது இந்திய பால்வள தொழில்துறையின் தனித்தன்மை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பால்வளத்துறையில் பிரதமரின் மோடியின் தலைமையில் கீழ் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின், விளைவாக கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி சுமார் 44% உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து, 8 கோடிக்கும் அதிகமான பால்வள விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் இந்திய பால்வள துறையின் செயல்பாடுகள் தொடர்பாக இந்த உச்சிமாநாட்டில் எடுத்துரைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்து இந்திய விவசாயிகள் தெரிந்து கொள்ளவும் இந்த உச்சிமாநாடு உதவிகரமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments