செப்.11 தாக்குதல் நினைவு தினம்.. அமெரிக்காவில் அனுசரிப்பு..!
செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுர தாக்குதல் சம்பவ நினைவு தினம் அமெரிக்காவில் இன்று அனுசரிக்கப்படுகிறது.
விமானங்கள் மோதி சீட்டுக் கட்டு போல பிரமாண்ட 2 கட்டிடங்கள், சரியும் இக்காட்சியை நிச்சயம் நாம் மறந்திருக்க மாட்டோம். ஆம், உலகையே உலுக்கிய நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு காட்சிகள்தான் இவை.
2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி 4 பயணிகள் விமானங்களை கடத்திய 19 அல்கொய்தா பயங்கரவாதிகள், அதில் 2 விமானங்களை நியூயார்க்கில் இருந்த ஆயிரத்து 300 அடிக்கும் மேல் உயரம் கொண்ட உலக வர்த்தக மைய இரட்டை கோபுர கட்டிடங்கள் மீது மோதினர்.
இதையடுத்து அமெரிக்க ராணுவ தலைமையகம் செயல்படும் பென்டகன் மீது ஒரு விமானத்தை மோதினர். பின்னர் 4வது விமானத்தை வாசிங்டன் டி.சி.யில் உள்ள அரசு கட்டிடம் மீது மோத முயன்றபோது, தரையில் விழுந்தது.
உலகையே உலுக்கிய இத்தாக்குதலில் 4 விமானங்களில் இருந்த அப்பாவி பயணிகள், இரட்டை கோபுர கட்டிடத்தில் இருந்த மக்கள், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உள்பட 2 ஆயிரத்து 900க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். 10 பில்லியன் டாலர் மதிப்புக்கு அமெரிக்காவுக்கு பொருட் சேதம் ஏற்பட்டது.
இத்தாக்குதல் பின்னணியில் அல்கொய்தா தலைவர் பின்லேடன் இருந்ததை கண்டுபிடித்து, அவரை ஒப்படைக்க ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த முல்லா உமர் தலைமையிலான தலிபான்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது. இதை தலிபான்கள் ஏற்காததால், போர் தொடுத்து, தலிபான் ஆட்சியை அமெரிக்கா அகற்றியது.
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அந்த தாக்குதல் சம்பவத்தில் பலியானோரின் நினைவாக நியூயார்க்கில் இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அமெரிக்கர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Comments