ரேசன் கார்டுக்கு ரூ 1000 வதந்தி.. யூடியூப்பருக்கு ஆப்படித்த போலீஸ்..!
ரேசன் கார்டுக்கு 1000 ரூபாய் தருவதாக போலி செய்தியை பரப்பிய புதிய அறிவிப்புகள் என்ற பெயரிலான யூடியூப்பரை போலீசார கைது செய்துள்ளனர். அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக பிரபல சேனல்களின் டெம்ப்ளட்டுகளை திருடி பொய் செய்தி பரப்பிய எச்.சி.எல் நிறுவன ஊழியர் கம்பி எண்ணும் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
ரேசன் கார்டுக்கு 1000 ரூபாய்...! ரேசன் கார்டுக்கு சிலிண்டர் இலவசம் ..! இப்படி பொய்யான தகவல்கள், செய்திகளாக புதிய அறிவிப்புகள் என்ற யூடியூப் சேனலில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் படத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. பிரபல செய்தி சேனல்களின் யூடியூப் டெம்ப்ளெட்டுகளை திருடி அதே போல பதிவிடுவதால் இந்த பொய் செய்தி பலரை சென்றடைந்தது.
தாம்பரம் 48 வது வார்டு கவுன்சிலர் கார்த்தி என்பவரும் இந்த செய்தியை பார்த்து விட்டு அருகில் உள்ள ரேசன் கடைக்கு என்று 1000 ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவிப்பு ஏதும் வந்துள்ளதா ? என்று கேட்டுள்ளார் அப்படி ஒரு அறிவிப்பு வரவில்லை என்று கூறி உள்ளனர். இதையடுத்து அந்த யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட பெரும்பாலான செய்திகள் பார்வையாளர்களை ஈர்க்க பதிவிடப்பட்ட போலியான அறிவிப்புகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து மக்களை ஏமாற்றும் நோக்கிலும் அரசுக்கு கெட்ட பெயர் பெற்றுத்தரும் வகையிலும் போலியான தகவல்களை பரப்பி வரும் புதிய அறிவிப்புகள் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை மேற்கொள்ள சேலையூர் உதவி ஆணையரிடம் புகார் அளித்தார். இதையடுத்து புதிய அறிவிப்புகள் யூடியூப் சேனலில் பொய்யான செய்திகளை பதிவிட்டு வந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, நாகி ரெட்டி பாளையத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்ற 22 வயது பொறியியல் பட்டதாரி என்பது தெரியவந்தது.
சென்னையில் தங்கி எச்.சி.எல் நிறுவனத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் ஜானார்த்தனன். யூடியூப் சேனல் தொடங்கி குறுகிய காலத்தில் அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக பிரபலமான செய்தி சேனல்களின்பிரேக்கிங் செய்தி டெம்ப்ளட்டுகளை திருடி அதில் உள்ள லோகோவை மறைத்து கவர்ச்சிகரமாக பொய்யான தலைப்பிட்டு வீடியோ பதிவேற்றியது தெரியவந்தது.
இதையடுத்து ஜானார்த்தனனை கைது செய்த போலீசார் , அவர் பதிவிட்ட போலி வீடியோக்களை கைப்பற்றி விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments