இங்கிலாந்து மன்னரானார் சார்லஸ்.. தேசிய கீதம் உள்ளிட்டவற்றில் மாற்றம்..!
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து, அவரது மகனான சார்லஸ், இங்கிலாந்தின் புதிய மன்னராக முறைப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பதவியேற்றார். இதன் மூலம், அதிக வயதில் இங்கிலாந்து மன்னரானவர் என்ற பெருமையை 73 வயதான சார்லஸ் பெற்றார்.
இங்கிலாந்தில் 70 ஆண்டுகளாக ராணியாக இருந்த எலிசபெத் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய மன்னர் பிரகடனப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
லண்டனில் உள்ள செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனையில் முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கிய அக்சசன் கவுன்சில் கூட்டத்தில் இங்கிலாந்தின் மன்னராக சார்லசை அதிகாரப்பூர்வமாக அறிவித்து முழு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இந்த அக்சசன் கவுன்சிலில், கடந்தகால மற்றும் தற்போதைய மூத்த எம்.பி.க்கள், சில காமன்வெல்த் உயர் ஆணையர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். நிகழ்ச்சியில், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரெஸ், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.
முதலில், ராணி எலிசபெத்தின் மரணம் அக்சசன் கவுன்சிலின் அறிவிக்கப்பட்டு, பிரகடனம் வாசிக்கப்பட்டது. அதன் பிறகு, அந்த பிரகடனத்தில் பிரதமர் உட்பட பல மூத்த பிரமுகர்கள் கையெழுத்திட்டனர். இதனை தொடர்ந்து, உறுதிமொழியை வாசித்து மன்னர் சார்லஸ் கையொப்பமிட்டார்.
இங்கிலாந்து மன்னராக சார்லஸ் பிரகனப்படுத்தப்பட்ட நிலையில், பாரம்பரிய முறையில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
மேலும், 41 பீரங்கி குண்டுகள் முழங்க புதிய மன்னர் சார்லசுக்கு மரியாதை அளிக்கப்பட்டது
புதிய மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டதால், அந்த நாட்டின் தேசிய கீதம், கரன்சி, பாஸ்போர்ட் உள்ளிட்டவை மாறுகின்றன. இங்கிலாந்தின் நாணயங்கள், கரன்சியில் தற்போது ராணி இரண்டாம் எலிசபெத்தின் படம் இடம்பெற்றிருக்கும் நிலையில், இனி அச்சிடப்படுபவற்றில் மன்னர் சார்லஸின் படம் இடம்பெறும். அடுத்த 2 ஆண்டுகளில் புதிய நாணயம், கரன்சிகள் புழக்கத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேபோல், பாஸ்போர்ட், அஞ்சல் தலைகள் ஆகியவற்றிலும் சார்லஸை முன்னிறுத்தி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மேலும், 'காட் சேவ் தி குயின்' என பாடப்பட்ட இங்கிலாந்து தேசிய கீதத்தின் வரிகள், 'காட் சேவ் தி கிங்' என்று இனி பாடப்படும்.
Comments