மனித உயிரோடு விளையாடுவதா..?

0 3543

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்ட வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை பரிசோதனை செய்ததை தொடர்ந்து சிகிச்சை பெற உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது செவிலியருக்கு பதிலாக, மருத்துவமனையில் சுகாதார மற்றும் தூய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த பணியாளர்களில் ஒருவரான பெண் பணியாளர் அவருக்கு டிரிப்ஸ் போட்டுள்ளார். பின்னர் டிரிப்ஸ் முடிந்து அடுத்த பாட்டிலை மாற்ற வேறு ஒரு ஆண் ஒப்பந்த பணியாளர் வந்த போது அவரால் டிரிப்ஸ்சை சரியாக லாக் செய்ய முடியவில்லை.

இதனால் நோயாளி சக்திவேலின் ரத்தம் உடலில் இருந்து டிரிப்ஸ் மூலம் ரிட்டன் ஆவது கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர்கள் சப்தமிட்டுள்ளனர். இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சக்திவேல் தொடர்ந்து இங்கு சிகிச்சை பெற்றால் தம் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என அஞ்சி இங்கு சிகிச்சை பெற விரும்பவில்லை என கூறி, டிஸ்சார்ஜ் மெமோ வாங்கிக் கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டார்.

இந்த நிலையில் சுகாதார பணி மற்றும் தூய்மை பணியில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்டோரே கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முற்றிலும் அனுபவமும், அது தொடர்பான படிப்பு இல்லாமல் செவிலியர் பணியை ஆபத்தான முறையில் மேற்கொள்வது சக நோயாளிளையும், பொது மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உடனடியாக சுகாதாரப்பணிகள் உயர் அலுவலர்கள் மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு இத்தகைய மனித உயிர்களோடு விளையாடுகின்ற விபரீதங்களை இனி மேலும் தொடராமல் தடுத்து நிறுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments