வரும் 12ஆம் தேதியுடன் இந்திய - சீனாவின் படைவிலக்க நடைமுறைகள் முடிவடையும் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
கிழக்கு லடாக்கில் உள்ள கோக்ரா - ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் வரும் 12ஆம் தேதியுடன் இந்திய - சீனாவின் படைவிலக்க நடைமுறைகள் முடிவடையும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டில் இந்திய - சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 40 சீன வீரர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின், இரு நாடுகளும், எல்லையில் படைகளை குவித்தன. இதனால், லடாக் எல்லையில் கடந்த 2 ஆண்டுகளாக பதற்றமான சூழல் நிலவிவந்தது.
இதனை அடுத்து, லடாக் பகுதியில் பதற்றத்தை குறைப்பது தொடர்பாக, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். 15 சுற்றுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், படை விலக்கம் தொடர்பாக இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளும் கலந்தாலோசித்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 17ஆம் தேதியன்று இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் இடையே 16வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் லடாக் எல்லையின் முக்கிய பகுதிகளில் இருந்து இரு நாடுகளின் படைகளை விலக்கிக் கொண்டு அமைதியை கடைபிடிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து, கிழக்கு லடாக் எல்லையின் கோக்ரா - ஹாட்ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் நேற்று தொடங்கியதாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த படை விலகல் நடைமுறைகள் திங்கட்கிழமையுடன் முடிவடையும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இப்பகுதியில் உருவாக்கப்பட்ட அனைத்து தற்காலிக கட்டமைப்புகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் அகற்றப்படும் என்றும் அதனை இருதரப்பும் உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments