இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் காலமானார்.. உலக தலைவர்கள் இரங்கல்..!
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத், உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
6-ம் ஜார்ஜ் மன்னரின் மறைவைத் தொடர்ந்து 26வது வயதில் 2ம் எலிசபெத் 1952-ம் ஆண்டு அரியணை ஏறினார். 96 வயதான அவர், 70 ஆண்டுகள் ராணியாக இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து ஓய்வு எடுப்பதற்காக ஸ்காட்லாந்தில் உள்ள பால்மரால் அரண்மனைக்கு சென்று இருந்தார். அங்கு அவர் ஓய்வு எடுத்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை லிஸ் டிரஸை புதிய பிரதமராக நியமித்தார். இதுவே அவருடைய கடைசி அரச நிகழ்ச்சியாகும். இதையடுத்து உடல்நிலை மோசமானதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்றிரவு உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இங்கிலாந்து அரச குடும்ப வழக்கப்படி, அரசி அல்லது மன்னர் மரணமடைந்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் வாரிசு பதவி ஏற்க வேண்டும். அதன்படி 73 வயதாகும் அவருடைய மகன் இளவரசர் சார்லஸ் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, முதல் கட்டமாக இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ராணி எலிசபெத் மரணம் தொடர்பான மற்ற நிகழ்ச்சிகள் சுமார் ஒரு மாதம் வரை நடக்கும் என்று கூறப்படுகிறது.
10 நாட்கள் ராணி எலிசபெத் உடலுக்கு உலக தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவுள்ளனர். ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குகள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ராணியின் உடல் 3 நாட்களுக்கு வைக்கப்பட்டு இருக்கும். அந்த 3 நாட்களும் பொதுமக்கள் தினமும் 23 மணி நேரம் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
10-வது நாள் அரசு முறைப்படியான இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, லண்டனில் உள்ள அரச குடும்பத்தினர் பிரத்தியேகமாக அடக்கம் செய்யப்படும் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
ராணி எலிசபெத் மறைவை அடுத்து லண்டனிலுள்ள அரண்மனை வாசலில் பூங்கொத்துகளை வைத்து இங்கிலாந்து மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள், ராணி எலிசபெத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Comments