பிரிட்டனின் புதிய மன்னரானார் இளவரசர் சார்லஸ்.. இனி மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என அறிவிப்பு.!
ராணி எலிசபெத்தின் மறைவை அடுத்து, இளவரசர் சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னாரானார். அந்நாட்டின் உச்சபட்ச அமைப்பான பிரிவி கவுன்சிலில் உரை நிகழ்த்தி சார்லஸ் பொறுப்பேற்றுக் கொள்வார்.
பிரிட்டன் அரச வம்ச சட்டத்தின்படி மூத்த மகனும் இளவரசருமான 73 வயதான இளவரசர் சார்லஸ் அந்நாட்டின் மன்னரானார். அவர் இனி மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் வடஅயர்லாந்து அடங்கிய ஐக்கியக் குடியரசின் மன்னராகவும், காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும் இவர் பொறுப்பு வகிப்பார்.
இங்கிலாந்து ராணியின் மறைவை அறிவித்த அந்நாட்டின் பிரதமர் லிஸ் டிரஸ், புதிய மன்னர் சார்லஸ் என தமது உரையில் குறிப்பிட்டார்.
மன்னர் சார்லஸ் விடுத்துள்ள அறிக்கையில், ராணியின் மறைவு பிரிட்டன் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் அடுத்த பத்து நாட்களுக்கான நிகழ்ச்சிகள் ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ் என்ற திட்டத்தின்படி நடைபெற உள்ளன. முதல்நாளான இன்று ராணியின் மறைவு குறித்து நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை சார்லஸ் வெளியிடுவார். மன்னர் குடும்ப அரண்மனைகளில் மக்கள் மலர்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
ராணியின் உடல் நாளை எடின்பரோவில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்படும். மன்னர் என்ற முறையில் நீதிபதிகள், அரசியல் பிரமுகர்கள், பிஷப்புகள் இடம்பெற்றுள்ள பிரிவி கவுன்சில் முன்னிலையில் சார்லஸ் உரை நிகழ்த்துவார்.
9-வது நாளில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் உலக நாடுகளின் பிரமுகர்கள், அரச குடும்பத்தினர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் இரங்கல் தெரிவிக்கப்படும்.
Comments