"புதிய சகாப்தம் தொடக்கம்".. பிரதமர் மோடி பெருமிதம்..!

0 3020

டெல்லியில் புதுப்பிக்கப்பட்டு கடமைப் பாதை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ராஜபாதையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையையும் திறந்து வைத்த பிரதமர் மோடி , நாட்டின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர், குடியரசு துணைத் தலைவருக்கான இல்லங்கள், மத்திய அமைச்சகங்களின் செயலகம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கிலோ மீட்டர் தூர ராஜபாதையை மறுசீரமைப்பது ஆகிய பணிகளை சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 450 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 20 மாதங்களாக பணிகள் நடைபெற்ற நிலையில், திட்டத்தின் ஒரு பகுதியாக கடமை பாதை என பெயர் மாற்றப்பட்ட புதுப்பிக்கப்பட்ட ராஜபாதையை பிரதமர் திறந்து வைத்தார்.

கடமைப் பாதையில் 3 லட்சத்து 90 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு முற்றிலும் பசுமையான புல்வெளியாக மாற்றப்பட்டுள்ளது. சிவப்பு கிரானைட் நடைபாதைகள், சுமார் ஆயிரம் கார்கள் நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதி, கால்வாய்கள், பாலங்கள் என பிரமாண்டமாக அப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. 74 பழங்கால விளக்கு கம்பங்களும், 900 மின் கம்பங்களும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, இந்தியா கேட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் முழு உருவச்சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார். 28 அடி உயரம் கொண்ட இச்சிலை, 65 மெட்ரிக் டன் எடையுள்ள ஒற்றை பளிங்கு கல்லில் செதுக்கப்பட்டதாகும்.

நிகழ்ச்சியில் நேதாஜியின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் காணொளி ஒளிபரப்பட்டது.

பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாகவும், இத்தருணம் நம் நாட்டிற்கு வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றும் தெரிவித்தார். ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்த பல்வேறு சட்டங்களை இந்தியா மாற்றியுள்ளதாகவும், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் அடையாளமாக இருந்த ராஜபாதை கட்டமைப்பு தற்போது மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், நேதாஜியின் சிலை நிறுவப்பட்டதன் மூலம், அதிகாரம் பெற்ற இந்தியாவுக்கான புதிய பாதையை நாம் அமைத்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

சென்டிரல் விஸ்டா திட்டப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், அடுத்தாண்டு குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments