பிராங்க் வீடியோ தொந்தரவு.. சென்னையில் புகார்.!
பிராங்க் வீடியோ தொடர்பாக யூட்யூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்து கோவை போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில், பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் கட்டெறும்பு உள்ளிட்ட 5 யூ ட்யூப் சேனல்கள் மீது சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிராங்க் வீடியோஸ் என்ற பெயரில் குறிப்பாக இளம் பெண்களை குறிவைத்து அவர்களுக்கு தெரியாமல் கேமராவை மறைத்துவைத்து பேச்சுக் கொடுப்பது அதன் மூலம் அவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில் வீடியோக்களை பதிவு செய்து யூ ட்யூப்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இது போன்ற பிராங்க் வீடியோக்களை பதிவிடும் யூட்யூப் சேனல்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் பெண்கள் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இவர்கள் நடந்துகொள்வதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் ‘கோவை 360’ என்ற யூ ட்யூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்த கோவை மாநகர போலீசார் இது போன்ற வீடியோக்களை வெளியிடும் நபர்களை எச்சரித்தனர்.
இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவில் கட்டெறும்பு உள்ளிட்ட ஐந்து யூட்யூப் சேனல்கள் மீது பிராங்க் வீடியோக்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த ரோஹித்குமார் என்பவர் கொடுத்த புகாரில் கட்டெரும்பு, குல்பி, ஆரஞ்ச் மிட்டாய், ஜெய்மணிவேல் மற்றும் நாகை 360 என்ற இந்த 5 யூ ட்யூப் சேனல்களிலும் பெண்கள், முதியவர்கள் அனுமதியில்லாமல் துன்புறுத்தும் வகையில் வீடியோக்கள் எடுத்து வெளியிடுவதாகவும் இந்த யூ ட்யூப் சேனல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அவற்றை முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதில் கட்டெறும்பு யூடியூப் சேனலில் பிரபலங்களின் நண்பர்களின் தூண்டுதல் பெயரில் அவர்களை பிராங்க் செய்வது வாடிக்கை என்றும் முன் கூட்டியே பேசி வைத்து பிராங்க் போல வீடியோ வெளியிடுவது வழக்கம் என்றும் கூறப்படுகின்றது
சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களின் வீடியோக்களை ஆய்வு செய்து வரும் சைபர் கிரைம் போலீசார் , பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவரும் பிராங்க் யூடியூப்பர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments