நீதிமன்ற வளாகத்தில் கைதியை கொல்ல முயற்சி.. ஆயுதங்களுடன் வந்த 3 பேரை மடக்கிப் பிடித்த பெண் போலீசார்!
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில், வழக்கில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட ரவுடியைக் கொல்ல முயன்ற கும்பலில், 3 பேரை பணியில் இருந்த பெண் காவலர்கள் மடக்கி பிடித்தனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாலா என்பவன் மீது கொலை, ஆட்கடத்தல் உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை ரவுடிகளுடன் கூட்டுச் சேர்ந்து இவன் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
கூலிப்படை தலைவனான பாலா, இருந்த இடத்திலேயே ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்வது அவன் பாணியாகும். தென் சென்னை பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த மயிலாப்பூர் சிவக்குமாரை கடந்த ஆண்டு கூலிப்படையை ஏவி மதுரை பாலா கொலை செய்துள்ளான்.
இந்த வழக்கு விசாரணைக்காக, வேலூர் சிறையில் இருந்து பாலாவை போலீஸ் பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது திடீரென ஒரு கும்பல் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களுடன் அவன் மீது பாய்ந்தது.
இதனைக் கண்டு உஷாரான காவலர்கள் மதுரை பாலாவை சுற்றி நின்று கொலை கும்பலை பிடிக்க முயன்றனர். தாங்கள் போட்ட ஸ்கெட்ச் தவறியதால் 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்ப முயன்றது. அப்போது நீதிமன்ற வாயிலில் பாதுகாப்பில் இருந்த பெண் காவலர்களான ராஜலட்சுமி, கிருஷ்ணவேனி, சசிகலா ஆகியோர் அவர்களை மடக்க முயன்றனர்.
போலீஸ் பிடித்தால் பெப்பர் ஸ்பிரே அடித்துவிட்டு தப்பிவிடலாம் என்ற திட்டத்துடன் வந்த கொலை கும்பலில் இருவர் தப்பி ஓடிவிட்டனர்.
பின்னால் ஓடி வந்த மூவரில் முதலில் கத்தியுடன் பாய்ந்த ஒருவனை எதிர் கொண்ட ஆயுதப்படை பெண் காவலர் தனது எஸ்.எல்.ஆர் ரக நீண்ட துப்பாக்கியை திருப்பி வைத்து துப்பாக்கியின் அடி பாகத்தால் தலையில் ஓங்கி அடித்ததும் அந்த நபர் மண்டை உடைந்து ரத்தம் கொப்பளிக்க சரிந்து விழுந்தான்.
பின்னால் ஓடி வந்த இருவர் பீதியடைந்த நிலையில், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மற்ற பெண் காவலர்கள் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கத்தியுடன் ஒரு பெப்பர் ஸ்பிரேவும் கைப்பற்றப்பட்டது. பிடிபட்ட மூன்று பேரும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வெட்ட வந்த நபர்கள் செனாய் நகரை சேர்ந்த சக்திவேல், அருண் மற்றும் குன்றத்தூரை சேர்ந்த அப்துல் என்பது தெரியவந்தது. அமைந்தகரை பகுதியில் ரவுடிகளான அப்பாஸ் மற்றும் ரோகித் ஆகியோரிடையே மாமூல் வசூலிப்பதில் தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரவுடி ரோகித்துக்கு ஆதரவாக மதுரை பாலா செயல்பட்டு வருவதால் அந்த பகுதியில் ரோகித்தின் கை ஓங்கியுள்ளது.
இதனால் அப்பாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து சதித் திட்டம் தீட்டி மதுரை பாலா நீதிமன்ற வளாகத்தில் வரும்போது கொல்லமுயன்றது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள அப்பாஸ் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த இந்த கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கக்தியுடன் பாய்ந்த கொலையாளிகளை சமயோசிதமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்பட்டு பிடித்த மூன்று பெண் காவலர்களையும் அதிகாரிகள் பாராட்டினர்.
இதனையடுத்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உதவி ஆணையர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தின் இரண்டு நுழைவு வாயில்களிலும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், நீதிமன்றத்திற்கு வழக்கிற்காக வரும் நபர்களின் பெயர், விவரங்கள் மற்றும் உடமைகள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
Comments