இருட்டுப் பேருந்து உருட்டு ஓட்டுனர்.. இருளில் பரிதவித்த பயணிகள்!
செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்தில் உள்ளேயும், வெளியேயும் விளக்குகள் எரியாததால் இருட்டோடு இருட்டாக உருட்டிச் செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
செங்கல்பட்டில் இருந்து செய்யூர் வரை செல்லக்கூடிய அரசுப் பேருந்தின் உள்ளேயும் முன்புறம், பின்பிறம் உள்பட பேருந்து முழுவதிலும் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டில் இருந்து செய்யூர் செல்வதற்காக புறப்பட்டு சென்ற பேருந்து வெளிச்சம் இல்லாததால், ஓட்டுனர் பேருந்தை உருட்டோ உருட்டு என்று ஆமை வேகத்தில் நகர்த்திச் சென்றார்.
இருளில் அமர்ந்திருந்ததால் அச்சம் தெரிவித்த பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் சண்டையிட்டு, தங்களுக்கு பயமாய் இருப்பதாகக் கூறி, மாற்றுப் பேருந்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
பயணிகள் அவதிப்படுவதை உணர்ந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி, மாற்று பேருந்தில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஓட்டுநர் கூறுகையில். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் போது லைட் சரியாக எரிந்ததால் நம்பிக்கையோடு பயணிகளை ஏற்றிச்சென்றோம். ஆனால் சிறிது தூரம் சென்றதும் விளக்குகள் பழுதாகி விட்டதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது என்று கூறினார்.
ஆனால் பயணிகள் தரப்பில் கூறும்போது செங்கல்பட்டு பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்துமே ஏதாவது ஒருவிதத்தில் கோளாறாகி பாதியில் நிறுத்துவதும் மாற்று பேருந்தில் அவதிப்படுவதும் தங்களுக்கு வழக்கமாகி விட்டதாகத் தெரிவித்தனர்.
அனைத்து வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளையும் தரமாக உள்ளதா? என வாகன சோதனைக்கு பிறகுதான் பேருந்தை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments