கடலில் கரைந்த விநாயகர் சிலைகள்.. சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.!
சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட ஏராளமான சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வங்கக் கடலில் கரைக்கப்படுகின்றன. சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், சி.சி.டி.வி. கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது...
கடந்த 31ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2,500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு தினசரி பூஜைகள் நடைபெற்றன. மேலும், சிலைகளை பாதுகாக்கும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க இன்று அனுமதியளிக்கப்பட்ட நிலையில் பெருநகர் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பினை தீவிரப்படுத்தினர். 15 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோர் தொடர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
சி.சி.டி.வி. கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், திருவல்லிக்கேணி பாரதி சாலை சந்திப்பில், முள்வேலிகளுடன் கூடிய தடுப்புகள் அமைக்கப்பட்டன. கடலோர பாதுகாப்பு படையினரும் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிலைகள் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டதால், நகரில் பல்வேறு இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில், கோடம்பாக்கம் சாலை, ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில், பெருநகரின் பல்வேறு இடங்களில் இருந்தும் வாகனங்களில் ஏராளமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கடற்கரையை நோக்கி சென்றன.
காவல்துறை பாதுகாப்புடன் மேள தாளத்துடன் விநாயகர் சிலைகள் உற்சாகமாக கொண்டு செல்லப்பட்டன.
கடற்கரைகளில் காணுமிடமெல்லாம் கண்ணை கவரும் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் அணிவகுத்த நிலையில், காவல்துறையின் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி சிலைகள் கடலில் கரைக்கக்கப்பட்டன. விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வுகளை காண ஏராளமான பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகளில் குவிந்தனர்.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
கோயம்புத்தூரில் சுமார் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், உற்சாகமாக வாகனங்களில் ஊர்வலாக கொண்டு செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட்டன.
தூத்துக்குடியில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒரு அடி முதல் 11 அடி வரை உயரமுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைக்கப்பட்டன.
Comments